இன்று தனது 74 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்துக் குறிப்பில் ‘பேரன்பிற்கும் மரியாதைக்கும் உரிய சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தாங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்’ எனப் பதிவிட்டுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்னர் ரஜினிகாந்த், அறுவைச் சிகிச்சை செய்ய மருத்துவமனையில் அனுமதியானபோதும்கூட, ரஜினிகாந்த் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என விஜய் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இதேவேளை நடிகர் கமல்ஹாசனும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு தனது பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் ” ‘அன்பு நண்பர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். மென்மேலும் பல வெற்றிகள் பெறுக. நலம் சூழ்க,மகிழ்ச்சி நிறைக, நீடு வாழ்க!’ எனப் பதிவிட்டுள்ளார்.