என்பிபியின் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரும் வெளிவிவகார இணை அமைச்சரமாகிய அருண் ஹேமச்சந்திர வீரகேசரி யூரியூப் சனலுக்கு வழங்கிய நேர்காணலில்,ஓரிடத்தில் தமிழ்த் தரப்பு என்ற வார்த்தை தொடர்பாக கேள்வி எழுப்புகிறார். அவர் அங்கே என்ன கூற வருகிறார் என்றால், இப்பொழுது வடக்கு கிழக்கில் இருந்து ஏழு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் உண்டு. வடக்கு கிழக்குக்கு வெளியேயும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உண்டு. எனவே தமிழ்த் தரப்பு என்பது இப்பொழுது தமிழ் தேசியத் தரப்புமட்டும் அல்ல என்பதுதான்.
அரசாங்கத்தில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களில் குறிப்பாக வடக்குக் கிழக்கில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர்களில் ஜேவிபியின் நீண்ட கால உறுப்பினராக இருந்தவர் அவர். மேலும் மூன்று இனங்களின் வாக்குகளையும் பெற்று நாடாளுமன்றத்துக்கு வந்தவர். அவர் கூற வருவது போல,இம்முறை தமிழ் தேசியத் தரப்பு மொத்தம் பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களோடு காணப்படுகிறது. அதே சமயம் தமிழர் தாயக பகுதியில் இருந்து ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துக்கு உண்டு. எனவே தமிழ்த் தரப்பு என்று வரும் பொழுது தமிழ் தேசிய தரப்பு மட்டும் அல்ல. அரசாங்கத்தோடு நிற்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை பிரதிநிதித்துவப் படுத்தவில்லை.எனவே இனப்பிரச்சனைக்கான தீர்வைக் காண முற்படும்பொழுது வடக்குக் கிழக்கில் அரசாங்கத்திற்கு விழுந்த வாக்குகளையும் கவனத்தில் எடுக்க வேண்டும் என்பதுதான்.
தமிழ் பிரதிநிதிகள் என்று பார்த்தால் இப்பொழுது அரசாங்கத்தில் மொத்தம் 28 பேர் உண்டு. அதில் வடக்கு கிழக்கில் மட்டும் ஏழு பேர் உண்டு. இனப்பிரச்சனைக்கு தீர்வு என்று வரும்போது அரசாங்கத்தோடு நிற்கும் ஏழு பேரின் நிலைப்பாட்டையும் எப்படிப் பார்ப்பது?
இதில் அதிகம் விவாதத்துக்கு இடமில்லை. அவர்கள் ஏழு பேரும் அரசாங்கத்தின் பிரதிநிதிகள்தான். தமிழ்த் தேசியத்தின் பிரதிநிதிகள் அல்ல. அரசாங்கக் கொள்கையை அவர்கள் பிரதிபலிப்பார்கள். பேச்சுவார்த்தை மேசையில் அவர்கள் அரசாங்கத்தின் தரப்பாகத்தான் பங்குபற்றலாம். தமிழ்த் தேசியத் தரப்பாக அல்ல.
ஆனால் தமிழ்த் தேசியத் தரப்பானது மொத்தம் பத்து உறுப்பினர்களாகச் சுருங்கி போய் இருப்பதனால், அருண் ஹேமச்சந்திர போன்றவர்கள் தமிழ்த் தரப்பு என்றால் தனிய தமிழ்த் தேசியத் தரப்பு மட்டும் அல்ல என்ற பொருள்பட கருத்துக் கூற முற்படுகிறார்கள்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் மத்தியில் அரசாங்கம் பெற்ற வெற்றிகளை வைத்து அவ்வாறு கூறமுடிகிறது. ஆசனக் கணக்கின் அடிப்படையில் பார்த்தால் தமிழ்த் தரப்பு நாடாளுமன்றத்தில் மிகவும் பலவீனமாகிவிட்டது. தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை உறுதியாக எடுத்துக் கூறக்கூடியவர்களின் எண்ணிக்கை மேலும் குறைந்திருக்கிறது. இனப்பிரச்சினை அல்லாத ஏனைய பிரச்சினைகளும் தமிழ் மக்களுக்கு உண்டு என்று கூறி, இனப்பிரச்சினையை பத்தோடு பதினொன்றாக மாற்ற விரும்புகிறவர்களுக்கு அது வாய்ப்புகளை அதிகப்படுத்தியிருக்கிறது.தமிழ் மக்கள் ஒரு தேசமாக, பலமாக இல்லை. ஒரு திரட்சியாக இல்லை என்பதனை தேர்தல் முடிவுகள் உணர்த்தியிருக்கின்றன.
எல்லாத் தமிழ்த் தேசியக் கட்சிகளும் அதற்குப் பொறுப்புக் கூற வேண்டும். வென்ற தலைவர்களும் தோல்வியுற்ற தலைவர்களும் அதற்குப் பொறுப்புக் கூற வேண்டும். இந்தத் தோல்விகளின் பிதா சம்பந்தர்தான். சம்பந்தர் தொடக்கியதை சுமந்திரன் கச்சிதமாக முடித்து வைத்தார். முடிவில் தமிழ் ஐக்கியமும் சிதைந்து அவர்களுடைய சொந்தக் கட்சியும் சிதைந்து விட்டது. இப்பொழுதும் கட்சி நீதிமன்றத்தில் நிற்கின்றது. அதற்கு யார் தலைவர் என்பது தெளிவில்லை. நேற்று வவுனியாவில் நடந்த கட்சியின் மத்திய குழுக்கூட்டம் அதைக் காட்டுகின்றது. இதில் சுமந்திரன், சம்பந்தர் மட்டும் குற்றவாளிகள் இல்லை. மாவை முதற்கொண்டு கட்சியின் எல்லா மூத்த தலைவர்களுமே குற்றவாளிகள்தான். சுமந்திரனை பொருத்தமான விதங்களில் எதிர்த்து தன் தலைமைத்துவத்தை நிறுவத் தவறிய சிறீதரனும் குற்றவாளிதான்.
தமிழசுக் கட்சி மட்டுமல்ல, அக்கட்சியை எடுத்ததற்கெல்லாம் குறை சொல்லிக் கொண்டிருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் குற்றவாளிதான். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அரசியலானது ஒருவித எதிர்மறை அரசியலாகவே இருந்து வந்தது. ஏனைய கட்சிகளைக் குற்றம் காட்டுவதன் மூலம் தன்னைப் புனிதராகக் காட்டிய அக்கட்சியானது, தன்னைத் தமிழரசுக் கட்சியைத் தோற்கடிக்கும் ஒரு மாற்றுச் சக்தியாகக் கட்டி எழுப்பத் தவறிவிட்டது. தேசியவாத அரசியல் எனப்படுவது மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவதுதான் என்ற எளிமையான உண்மையை இரண்டு கட்சிகளுமே விளங்கி வைத்திருக்கவில்லை. தங்களைச் சுற்றி விசுவாசிகளைக் கட்டி எழுப்பிய அளவுக்கு தேசத்தைக் கட்டி எழுப்பத் தவறி விட்டார்கள். இரண்டு முக்கிய கட்சிகளுடையதும் தோல்விகளின் விளைவாகத்தான் இப்பொழுது தமிழ்த் தேசியத் தரப்பு மட்டும் நாடாளுமன்றத்தில் தனி ஒரு பலமான தமிழ்த் தரப்பாக இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. இது பேச்சுவார்த்தை மேசையில் தமிழ்த் தரப்பை பலவீனப்படுத்தும்.
தேசிய மக்கள் சக்தி இதுவரையிலும் இனப் பிரச்சினைக்கான தீர்வு எந்த அடிப்படையில் அமையும் என்பதனை அதற்குரிய அரசியல் அடர்த்திமிக்க வார்த்தைகளில் வெளிப்படுத்தியிருக்கவில்லை. இனப் பிரச்சினைக்கான தீர்வு பற்றி உரையாடும் பொழுது “சம உரிமை” என்ற வார்த்தையை அரசாங்கம் பயன்படுத்துகின்றது.இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்ட வெளிவிவகார பிரதி அமைச்சரின் நேர்காணலிலும் அது கூறப்படுகிறது.
சம உரிமை என்றால்,எல்லாரும் இலங்கையர்கள். ஒருவர் மற்றவருக்குச் சமம் என்பதா? அவ்வாறு நாட்டில் உள்ள எல்லா மதங்களும் சமமானவை என்று ஒரு நிலை தோன்ற வேண்டுமென்றால் இப்பொழுது அரசியலமைப்பில் தேரவாத பௌத்தத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் முன்னுரிமை அகற்றப்பட வேண்டும். அனுர அதைச் செய்ய மகா சங்கம் அனுமதிக்குமா?
மேலும்,இனப்பிரச்சினை தொடர்பில் இங்கே சீனத் தலைவர் மாவோ சேதுங் கூறும் உதாரணம் ஒன்றைச் சுட்டிக் காட்டலாம். கடலில் பெரிய மீனும் சிறிய மீனும் வாழும் பொழுது, இரண்டுக்கும் சம உரிமை என்று சொன்னால், அது சிறிய மீனைப் பாதுகாக்காது. ஏனென்றால் பெரிய மீன் சிறிய மீனைச் சாப்பிட்டு விடும். ஆனால் சிறிய மீனால் பெரிய மீனைச் சாப்பிட முடியாது.எனவே பெரிய மீனால் வேட்டையாடப்படாத பாதுகாப்பு ஏற்பாடு சிறிய மீனுக்கு வேண்டும்.தமிழ் மக்கள் அதைத்தான் கேட்கிறார்கள். தமிழ் மக்களை இறைமையும் சுய நிர்ணய உரிமையும் கொண்ட ஒரு தேசிய இனமாக,தேசமாக ஏற்றுக்கொண்டு உருவாக்கப்படும் கூட்டாட்சியைத்தான் தமிழ் மக்கள் கேட்கின்றார்கள்.
இலங்கைத் ஒன்றுக்கு மேற்பட்ட இனங்கள், தேசங்கள் உண்டு என்ற பல்வகைமையை, ஒன்றுக்கு மேற்பட்ட மதங்கள், ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகள் உண்டு என்ற பல்வகைமையை ஏற்றுக்கொண்டு ஒன்றுக்கு மேற்பட்ட தேசிய இனங்களுக்கு இடையில் இணக்கமான ஒரு கூட்டாட்சி ஏற்பாட்டை உருவாக்க வேண்டும்.
அவ்வாறான ஒரு கூட்டாட்சி ஏற்பாட்டுக்குரிய முன்மொழிவைத்தான் சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மக்கள் பேரவை முன்வைத்தது. இப்பொழுது அந்த முன் மொழியின் அடிப்படையில் தமிழ்க் கட்சிகளை ஒருங்கிணைத்துக் கொண்டு தமிழ்த் தேசியத் தரப்பாக பேச்சுவார்த்தை மேசைக்கு வருவதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முயற்சிக்கின்றது. தமிழ் மக்கள் நாடாளுமன்றத்தில் ஒரு தரப்பாகப் பலவீனமடைந்திருக்கும் ஒரு சூழலில், கஜேந்திரகுமாரின் இந்த முயற்சி வரவேற்கத்தக்கது. தமிழ் பொது வேட்பாளர் விடயத்தில் அப்படி ஒரு நிலைப்பாட்டை எடுத்திருந்திருந்தால், இப்பொழுது நாடாளுமன்றத்தில் இப்படி ஒரு நிலை வந்திருக்காது. தமிழ் மக்களைத் தோற்கடித்துத்தான் கற்றுக்கொள்ள வேண்டும் என்றால் இன்னும் எத்தனை நந்திக் கடல்களை தமிழ் மக்கள் கடக்க வேண்டியிருக்கும்?