உக்ரேனுடனான போரை முடிவுக்கு கொண்டு வரும் விவகாரத்தில் அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டெனால்ட் ட்ரம்புடன் சமரசம் செய்து கொள்ளத் தயாராகவுள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் வியாழக்கிழமை (19) தெரிவித்தார்.
அதேநேரம், உக்ரேனுடன் பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கு ரஷ்யாவுக்கு நிபந்தனைகள் இல்லை என்றும், ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி உட்பட யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் புட்டின் கூறினார்.
ஆனால், மோதல் நீடித்தால் உக்ரேனிய சோர்வு மேலும் மோசமடையும் என்றும் அவர் எச்சரித்தார்.
மேலும், உக்ரேனுடன் ஒரு தற்காலிக போர்நிறுத்தத்திற்கு உடன்படுவதற்கான யோசனையை ரஷ்ய ஜனாதிபதி நிராகரித்ததுடன், நீண்ட கால அமைதி ஒப்பந்தம் மட்டுமே வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
வியாழன் அன்று நடைபெற்ற ரஷ்ய அரச தொலைக்காட்சியொன்றின் வருடாந்திர கேள்வி-பதில் அமர்வின் போது இந்த விடயங்களை தெரிவித்த புட்டின், அமெரிக்க நிருபர் ஒருவரிடம் உக்ரேன் போர் விவகாரத்தில் தான் ட்ரம்ப்பை சந்திக்க தயாராகவுள்ளதாகவும் கூறினார்.
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியுடன் பல வருடங்களாக நான் பேசவில்லை என்றும் ரஷ்ய ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அதேநேரம், ரஷ்யா பலவீனமான நிலையில் உள்ளதாக ட்ரம்ப் கூறிய விமர்சனத்தை புட்டின் இதன்போது நிராகரித்தார். 2022 ஆம் ஆண்டு உக்ரைனில் படையினரை வரவழைத்ததில் இருந்து ரஷ்யா மிகவும் வலுவாக உள்ளது என்று கூறினார்.