ஜெய்ப்பூரில் அமைந்துள்ள எரிபொருள் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (20) ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்ததுடன், 24 பேர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜெய்ப்பூர்-அஜ்மீர் நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை காலை ஒரு டிரக் வாகனம், எரிவாயு ஏற்றிச் சென்ற டேங்கருடன் மோதி விபத்துக்குள்ளாகியது.
இதனால், நகரின் பாங்க்ரோட்டா பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீ பரவியதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தினை அடுத்து, எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல வாகனங்களும் தீயில் எரிந்து நாசமானது.
எரிவாயு ஏற்றிச் சென்ற டேங்கர் மீது மோதிய லொறியில் இரசாயம் இருந்ததே இந்த தீ விபத்துக்கான காரணம் என ஆரம்பக கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், 20 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.
மேலும் காயமடைந்தவர்களை ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான் சிங் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்க முயன்றபோது எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து பாரிய தீப்பிழம்புகள் வெளியேறியதை அப்பகுதியிலிருந்து வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.
சம்பவத்திற்குப் பிறகு, ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா, சவாய் மான் சிங் வைத்தியசாலைக்கு சென்று காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சையை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.