தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா தனது சமூக வலைத் தளப்பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 திரைப்படம் கடந்த 5ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வசூலை பெற்றுள்ளது.
இந்த திரைப்படத்தின் சிறப்பு காட்சி டிசம்பர் 4 -ம் திகதி இரவு ஹைதராபாத்தில் உள்ள திரையரங்கொன்றில் வெளியானது.இதன்போது அங்கு அல்லு அர்ஜுன் வருவதை அறிந்த மக்கள் அவரைப் பார்ப்பதற்காக அங்கு கூடியதால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இதில் சிக்கிய 35 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்ததோடு, அவரது மகனும் மூளைச்சாவடைந்துள்ளார். இந்த விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாக பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா குரல் கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘ அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டதை ஒவ்வொரு நட்சத்திரமும் கடுமையாக எதிர்க்க வேண்டும். ஏனென்றால், ஒரு திரைப்பட நட்சத்திரமாக இருந்தாலும் சரி அல்லது ஒரு அரசியல் நட்சத்திரமாக இருந்தாலும் சரி, அவர்கள் மிகவும் பிரபலமாக இருப்பது குற்றமா? எனது ‘க்சண க்சணம்’ படத்தின் படப்பிடிப்பில் ஸ்ரீதேவியை பார்க்க வந்த லட்சக்கணக்கான கூட்டத்தில் 3 பேர்உயிரிழந்தனர். அதற்காக இப்பொழுது ஸ்ரீதேவியை கைது செய்ய தெலுங்கானா பொலிஸார் சொர்க்கம் செல்வார்களா? ‘ இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிலையில் ராம் கோபால் வர்மாவின் குறித்த பதிவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/RGVzoomin/status/1869764328490188814