ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது அண்மைய இந்திய விஜயத்தைத் தொடர்ந்து, ஜனவரி நடுப்பகுதியில் சீனாவுக்கான உத்தியோகபூர்வ சுற்றுப் பயணத் திட்டத்தை அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த வாரம் சீன மக்கள் குடியரசின் அரசியல் ஆலோசனைக் சம்மேளன (CPPCC) தேசியக் குழுவின் உப தலைவர் கின் பொயோங்கை (Qin Boyong) சந்தித்து, உயரிய முன்னேற்றத்திற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்திய சில நாட்களுக்குப் பின் சீன விஜயம் தொடர்பான அறிவிப்பு வந்துள்ளது.
கண்டியில் ஊடகவியலாளர்களிடம் பேசும் போது ஜனாதிபதி, எதிர்வரும் ஜனவரி மாதம் நடுப் பகுதியில் தான் சீனாவுக்கு செல்லவுள்ளதாக கூறினார்.
கடந்த வாரம் அநுரகுமார திஸாநாயக்கவின் இந்திய விஜயம், செப்டம்பர் 21 ஆம் திகதி ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் அவர் மேற்கொண்ட முதலாவது வெளிநாட்டுப் பயணமாக அமைந்தது.
இந்திய விஜயத்தின் பின்னர் நாடு திரும்பிய ஜனாதிபதியை சீனவின் மூத்த அதிகாரி சந்தித்து உரையாற்றியதுடன், அவரது பீஜிங் விஜயத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக உறுதிப்படுத்தினார்.
சீனா இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவை தெரிவித்து வரும் நிலையில், சர்வதேச கடனை மறுசீரமைக்க சீனா அளித்த ஆதரவுக்கு ஜனாதிபதி இதன்போது நன்றி தெரிவித்திருந்தார்.