மோசமான வானிலை காரணமாக வடக்கு நோர்வேயில் வியாழன் (26) அன்று பயணிகள் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி ஏரியில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர்
மேலும் இந்த விபத்தில் நால்வர் பலத்த காயங்களுக்கு உள்ளானதாக அந் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
50 க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ், நார்விக்கிலிருந்து சோல்வேர் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, வடக்கு நோர்வேயின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான லோபோடென் தீவுக்கூட்டத்தில், ராஃப்ட்சுண்டெட் அருகே உள்ள ஹாட்சல் என்ற இடத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்தில் பலத்த காயமடைந்தவர்கள் ஹெலிகொப்டர் மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ஏனையவர்கள் பாடசாலைகள் உட்பட அருகிலுள்ள தங்குமிடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
விபத்தின் போது பஸ்ஸில் இருந்த பயணிகள் நோர்வே, இந்தியா, சீனா, சிங்கப்பூர், மலேசியா, நெதர்லாந்து, பிரான்ஸ் மற்றும் தெற்கு சூடான் உள்ளிட்ட எட்டு வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
பஸ்ஸில் சுமார் 20 சீன சுற்றுலாப் பயணிகள் இருந்ததாகவும், அவர்களில் ஐவர் சிறு காயங்களுக்கு உள்ளானதாகவும் நோர்வேயில் உள்ள சீனத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
சுற்றுலாப் பயணிகளுடன் தொடர்பைப் பேணி வருவதாகவும், அவர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்குத் தேவையான ஆதரவை வழங்குவதாகவும் தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.
நார்வே பிரதமர் ஜோனாஸ் கர் ஸ்டோர் விபத்தினால் உண்டான உயிரிழப்புகளுக்கு இரங்கல் தெரிவித்துள்ளதுடன், விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுடன் உடன் நிற்குமாறு தேசத்தை வலியுறுத்தினார்.