ஹபரணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹபரணை – திருகோணமலை வீதியில் கல்ஓயா பொலிஸ் வீதித்தடைக்கு அருகில் நேற்று (26) இரவு இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் வீதித் தடைக்கு அருகில் நின்றிருந்த பொலிஸ் உத்தியோகத்தரை, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக வந்த டிப்பர் வாகனம் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் சிகிச்சைக்காக ஹபரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர், மற்றும் விபத்தில் சிக்குண்ட மாற்றுமோர் காரில் இருந்த பெண் மற்றும் 04 மாத குழந்தை, லொறியின் சாரதி ஆகியோர் காயமடைந்து ஹபரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக தம்புள்ளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஹபரணை பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட கல்ஓயா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய 56 வயதான கந்தளாய் பதியாகம பகுதியில் வசித்து வந்த பொலிஸ் சார்ஜன்ட் ஆவார்.
அவரது சடலம் பொலன்னறுவை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.