2023 மோ மாதம் இராணுவ நிலையங்கள் மீதான தாக்குதல்களில் ஈடுபட்டதற்காக முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (PTI) கட்சியின் ஆதரவாளர்கள் உட்பட மேலும் 60 பொதுமக்களுக்கு பாகிஸ்தானின் இராணுவ நீதிமன்றம் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதித்துள்ளது.
வார இறுதியில், அதே நீதிமன்றம் இதே தாக்குதல்களுக்காக 25 பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி உறுப்பினர்களுக்கு இதேபோன்ற சிறைத் தண்டனை விதித்திருந்தது.
புதிதாக தண்டனை விதிக்கப்பட்ட சந்தேக நபர்களில் இம்ரான் கானின் மருமகன் ஹசன் நியாசியும் அடங்குவர்.
இவர் 2023 மே 09 அன்று லாகூரில் உள்ள உயர் இராணுவத் தளபதியின் இல்லத்தைத் தாக்கிய குற்றச்சாட்டுக்காக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார்.
தண்டனை குறித்து இராணுவத்தின் ஊடகப் பிரிவு வியாழக்கிழமை (27) வெளியிட்ட அறிக்கையில், நீதிமன்றம் அனைத்து ஆதாரங்களையும் மதிப்பாய்வு செய்து, குற்றவாளிகளின் சட்டப்பூர்வ தண்டனைகளை உறுதிசெய்து, உரிய செயல்முறை மற்றும் சட்ட நடவடிக்கைகளை முடித்த பின்னர் தண்டனைகளை வழங்கியதாகக் கூறியது.
பாகிஸ்தானின் அரசியலமைப்பு மற்றும் சட்டத்தால் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளபடி, அனைத்து குற்றவாளிகளுக்கும் மேல்முறையீடு செய்ய உரிமை உண்டு என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக 25 பாகிஸ்தானியர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனை சர்வதேச அளவில் குறிப்பிடத்தக்க விமர்சனத்தை ஏற்படுத்தியது.
ஐரோப்பிய ஒன்றியம் (EU), ஐக்கிய அமெரிக்கா (US), மற்றும் ஐக்கிய இராஜ்ஜியம் (UK) ஆகிய நாடுகள் அனைத்தும், இராணுவ நீதிமன்றத் தண்டனைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் சுயாதீன ஆய்வு இல்லாதது குறித்து கவலைகளை எழுப்பின, விசாரணைகளின் நியாயத்தை கேள்விக்குள்ளாக்கின.
எனினும், பாகிஸ்தானின் வெளிவிவகார அமைச்சு விமர்சனங்களை நிராகரித்தது, இஸ்லாமாபாத் அதன் சர்வதேச மனித உரிமைகள் கடமைகளை நிறைவேற்றுவதற்கு முழுமையாக அர்ப்பணிப்புடன் இருப்பதாக வலியுறுத்தியது.
2023 மே மாதம் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி ஆதரவாளர்கள் ராவல்பிண்டியில் உள்ள இராணுவத் தலைமையகம் மற்றும் லாகூரில் உள்ள ஒரு மூத்த இராணுவ அதிகாரியின் குடியிருப்பு உட்பட முக்கிய அரசாங்க கட்டிடங்கள், நினைவுச்சின்னங்கள் மற்றும் இராணுவ நிறுவல்களை குறிவைத்து, இந்த தளங்களில் பலவற்றை தீக்கிரையாக்கினர்.
இம்ரான் கானும் அவரது கட்சியும் வன்முறையானது பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் ஆதரவாளர்களை ஒடுக்குவதற்கான ஒரு சாக்குபோக்கை உருவாக்க இராணுவத்தால் திட்டமிடப்பட்ட நடவடிக்கை இது எனக் கூறியிருந்தது.