பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாபில் விவசாய சங்கங்கள் நடத்தி வரும் போராட்டம் காரணமாக மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயி ஜக்கித் சிங் தலேவாலுக்கு ஆதரவாக இந்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
போராட்டம் காரணமாக மாநிலம் முழுவதும் 221 ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 157 ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், 14 மணிநேர ரயில் அட்டவணையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து, பேருந்து போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஜலந்தர், மொஹாலி, ஷாம்பு உள்ளிட்ட பல மாநகரங்கள் மற்றும் நகரங்களில் உள்ள பெரும்பாலான தேசிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டிருப்பதால், வெளியூர் செல்லும் பயணிகளும், அலுவலகம் செல்வோரும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
போராட்டம் காரணமாக பல பாடசலைகள் மற்றும் அலுவலகங்களுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.