இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணியானது 45 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் நியூஸிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2:0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணியானது, நியூஸிலாந்துடன் மூன்று போட்டிகள் கொண்டி டி20 தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் முதலாவதாக இடம்பெறும் டி20 தொடரின் தொடக்கப் போட்டியில் நியூஸிலாந்து அணியானது எட்டு ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் தொடரின் இரண்டாவது டி20 போட்டியானது மவுண்ட் மவுங்கானுயில் உள்ள பே ஓவல் மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்று முற்பகல் 11.45 மணிக்கு ஆரம்பமானது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி களத்தடுப்பினை மேற்கொள்ளத் தீர்மானித்தது.
அதற்கிணங்க முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்புக்கு 186 ஓட்டங்களை பெற்றது.
நியூஸிலாந்து சார்பில் அதிகபடியாக சாப்மேன் 42 ஓட்டங்களையும், டிம் ராபின்சன் மற்றும் மிட்செல் ஹே ஆகியோர் தலா 41 ஓட்டங்களையும் அதிகபடியாக எடுத்தனர்.
பின்னர் 187 ஓட்டம் என்ற வெற்றி இலக்கினை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 141 ஓட்டங்களை மாத்திரம் எடுத்தது.
இதனால் நியூஸிலாந்து, 45 ஓட்டங்களினால் வெற்றி பெற்று டி20 தொடரை தன்வசப்படுத்தியது.
இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டி20 போட்டி எதிர்வரும் ஜனவரி 02 ஆம் திகதி நெல்சனில் அமைந்துள்ள சாக்ஸ்டன் ஓவல் மைதானத்தில் ஆரம்பமாகும்.