கடந்த டிசம்பர் 3 ஆம் திகதி இராணுவச் சட்டத்தை விதிக்க முயற்சித்ததற்காக தென் கொரியாவின் இடைநீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி யூன் சுக் யோலுக்கு (Yoon Suk Yeol) எதிராக சியோல் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கிளர்ச்சி மற்றும் தேசத்துரோக குற்றச்சாட்டுகள் தொடர்பாக பல விசாரணைகளை எதிர்கொண்டுள்ள யூன், கடந்த இரண்டு வாரங்களாக விசாரணைக்கு ஆஜராகுமாறு மூன்று அழைப்பாணைகளை புறக்கணித்ததை அடுத்து இந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை இரவு, புலனாய்வாளர்கள் யூனுக்கு கிளர்ச்சி மற்றும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் விசாரணைக்காக கைது செய்ய பிடியாணை உத்தரவினை நாடினார்.
தென் கொரியா குறுகிய கால இராணுவச் சட்டப் பிரகடனத்திலிருந்து அரசியல் நெருக்கடியில் உள்ளது.
யூன் மற்றும் அவரை அடுத்து செயல் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட ஹான் டக்-சூ இருவரும் நாடாளுமன்றத்தால் குற்றஞ்சாட்டப்பட்டனர்.
தென் கொரியாவில் இவ்வாறு குற்றம் சாட்டப்பட்ட முதல் ஜனாதிபதி யூன் ஆவார்.
அவரை விசாரணைக்காக காவலில் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு நீதிமன்ற 48 மணி நேரம் அவகாசம் அளித்துள்ளது.
எவ்வாறெனினும், புலனாய்வாளர்கள் அவரது பாதுகாப்புக் குழு மற்றும் எதிர்ப்பாளர்களால் பிடியாணை உத்தரவை முறியடிக்கப்படலாம் என்பதால், விசாரணையாளர்களால் அதனை நிறைவேற்ற முடியுமா என்பது தெளிவாக இல்லை.
நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட சோதனைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி அலுவலக மற்றும் யூனின் தனிப்பட்ட இல்லம் ஆகியவற்றிற்குள் புலனாய்வாளர்களை நுழைவதை ஜனாதிபதி பாதுகாப்பு சேவை முன்னர் தடுத்திருந்தது.
இதனிடையே திங்களன்று யூனின் சட்டக் குழு, இராணுவச் சட்டத்தை அறிவிப்பது ஜனாதிபதியின் அரசியலமைப்பு அதிகாரத்திற்குள் இருப்பதால், விசாரணையாளர்களுக்கு அவரைக் கைது செய்ய அதிகாரம் இல்லை என்று கூறியது.
இவ்வாறான பின்னணியில் யூன் எங்கிருக்கிறார் என்பது பகிரங்கமாக தெரியவில்லை, ஆனால் அவர் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.
அவரை பதவி நீக்கம் செய்ய சட்டமியற்றுபவர்கள் வாக்களித்த பின்னர், டிசம்பர் 14 முதல் அவர் ஜனாதிபதி பணிகளில் இருந்து இடைநிறுத்தப்பட்டாலும், நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றத்தால் அவரது பதவி நீக்கம் அமுல்படுத்தினால் மட்டுமே அவரை பதவியில் இருந்து நீக்க முடியும்.
யூன் இடைநீக்கம் செய்யப்பட்ட பின்னர், பதில் ஜனாதிபதி பதவிக்கு வந்த ஹானை பதவி நீக்கம் செய்ய எதிர்க்கட்சி கடந்த வாரம் வாக்களித்தது.
இப்போது, தற்போதைய ஜனாதிபதி மற்றும் தற்காலிகப் பிரதமராக நிதியமைச்சர் சோய் சாங்-மோக் செயற்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.