புதிய அரசியல் கலாசாரத்தின் ஆரம்பத்துடன்தான் இந்தப் புத்தாண்டு மலர்ந்துள்ளது. நாம் இந்த நாட்டை வளம் மிக்கதொரு நாடாக மாற்றியமைப்பதற்கான அடித்தளத்தை இட்டுள்ளோம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
“க்ளீன் ஶ்ரீலங்கா” (தூய்மையான இலங்கை) தேசிய வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
குடும்ப ஆட்சி, ஊழல், வீண் விரயங்கள், அதிகாரத் துஷ்பிரயோகம், மக்களுக்கு எதிரான செயற்பாடுகள் அனைத்தையும் மக்கள் இன்று புறக்கணித்துள்ளார்கள்.
எமது பொருளாதாரம் கடந்த காலங்களில் வங்குரோத்து நிலைக்கு சென்றிருந்தது. கடந்தாண்டு இறுதி கட்டத்தில், வங்குரோத்து நிலையிலிருந்து மீள்வதற்கான சந்தர்ப்பம் எமக்கு கிடைத்தது.
இன்று பொருளாதாரம் சற்று ஸ்தீரப்படுத்தப்பட்டுள்ளதுடன் இதனை இன்னும் பலப்படுத்தும் வகையில், செயற்பாடுகளை அரசாங்கம் என்ற வகையில் மேற்கொள்ள நாம் தயாராகவே உள்ளோம்.
அத்தோடு, எமது நாட்டின் பாதுகாப்பையும் நாம் பலப்படுத்தியுள்ளோம். கடந்த ஆண்டு அருகம்பே பகுதியை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டது.ஆனால், எமது பொலிஸாரும் முப்படையினரும் இணைந்து நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளார்கள்.
நாம் படிப்படியாக சட்டத்தின் ஆட்சியை பலமாக்க வேண்டும். கடந்த காலங்களில் சட்டத்தின் ஆட்சி இல்லாத ஒரு நாடாகவே எமது நாடு காணப்பட்ட நிலையில் குற்றவாளிகள் சட்டத்திற்கு மேல் இருந்து தப்பித்திருந்தார்கள். அரசியல்வாதிகள் தங்கள் நினைத்தவாறு சட்டத்தை மாற்றி, அரசியலமைப்பை மீறினார்கள்.
எமது நாட்டின் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு எதிராக உயர்நீதிமன்றமே, அரசமைப்பை மீறியுள்ளார்கள் என்று தீர்ப்பளித்துள்ளது.
இந்த நிலைமையை நாம் மாற்றியமைப்போம். அத்தோடு, ஊழல்- வீண் விரயங்களும் எமது நாட்டின் ஒரு நோயைப் போன்று பரவியுள்ளது.இதனை வேறோடு இல்லாதொழிக்க வேண்டும். சட்டமா அதிபர் திணைக்களம் இதற்கான முழுமையான ஒத்துழைப்பை எமக்காக வழங்கும்.
அரச அதிகாரிகளும் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்களை சரியாக உணர்ந்து, கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்று இவ்வேளையில் கேட்டுக் கொள்கிறேன்.
நாட்டு மக்களை வறுமையிலிருந்து மீட்டெடுக்க வேண்டும் என்பதுதான் எமது அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும்.பொருளாதாரமானது ஒரு தரப்பிடம் மட்டும் குவிந்து இருந்தால், ஒருபோதும் வறுமையை இல்லாதொழிக்க முடியாது.
இதனை ஒழிக்கும் வகையில் நாம் வரவு- செலவுத் திட்டத்தில் நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.
இரண்டாவதாக நாட்டை டிஜிட்டல் மயமாக்க வேண்டும். மூன்றாவதான கீளின் ஸ்ரீலங்கா திட்டத்திற்கு அமைய அனைத்துத் துறைகளையும் தூய்மையாக்க வேண்டும்.
மேலும் எமது நாடு மிகவும் அழகானதொரு நாடாகும். ஆனால், இந்த அழகான நாட்டில் 2023 ஆம் ஆண்டில் மட்டும் யானை- மனிதன் மோதலில் 182 பேர் உயிரிழந்துள்ளார்கள்.2023 ஆம் ஆண்டில் 484 யானைகள் மனிதர்களால் கொல்லப்பட்டுள்ளன. இதுதான் நாட்டின் நிலைமை.
வெள்ளம், மண்சரிவு உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்களினாலும் அதிகளவானோர் உயிரிழக்கின்றார்கள்.
எமது நாட்டு சொத்துக்களையும் மக்களையும் பாதுகாப்பதே கிளின் ஸ்ரீலங்கா திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
அதேநேரம், மக்களுக்கும் தங்களின் உயிரின் பெறுமதி தெரியாமல் உள்ளது. நான் ஏன் இவ்வாறு கூறுகிறேன். ஏனெனில், கடந்த ஆண்டு மட்டும் நீரில் முழ்கி 595 பேர் உயிரிழந்துள்ளார்கள். வாகன விபத்துக்களில் 2321 பேர் கடந்த ஆண்டு உயிரிழந்துள்ளார்கள். ஒரு நாளைக்கு 7 பேர் விபத்துக்களால் உயிரிழக்கிறார்கள்.
தங்களதும், பிறரின் உயிர் தொடர்பாகவும் மக்களுக்கு கவலை இல்லாமல் உள்ளது. இந்த சமூதாயத்தை மாற்றியமைக்க வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது.அத்தோடு, மக்களுக்கு விஷமில்லாத உணவை வழங்க வேண்டிய பொறுப்பும் அரசாங்கத்திற்கு உள்ளது.
விசேட தேவையுடையவர்களையும் ஒதுக்கி விட்டு பயணிக்க முடியாது. ஒரு தரப்பை ஒதுக்கிவிட்டு பயணிக்கும் ஒரு சமூகம் ஒருபோதும் வளர்ச்சியடைந்த சமூகமாக வளர்ச்சியடையாது.
அரச சொத்துக்களை பாதுகாக்க வேண்டிய பிரதான பொறுப்பு எம் அனைவருக்கும் உள்ளது. தனிப்பட்ட சொத்துக்களை பாதுகாக்கும் அளவுக்கு அரச சொத்துக்களை இங்கு யாரும் பாதுகாப்பதில்லை என்றும்
அரச சொத்துக்கள் இந்த தலைமுறைக்கு மட்டும் உரித்தானது கிடையாது. மாறாக இவற்றை பாதுகாத்து அடுத்த தலைமுறையினருக்கு கையளிக்கும் செயற்பாட்டையும் கிளின் ஸ்ரீலங்கா திட்டத்தில் உள்ளடக்கியுள்ளோம். என்று நாம் கேட்டுக் கொள்கிறோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.