தென்கிழக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள மொண்டெனேகுரோவின் (Montenegro) மேற்கு நகரமொன்றில் புதன்கிழமை (01) மதுபானசாலையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இரு குழந்தைகள் உட்பட குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சம்பவத்தில் மேலும் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டவர் 45 வயதான அகோ மார்டினோவிக் (Aco Martinovic) என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
சந்தேக நபர் துப்பாக்கிச் சூட்டுக்கு பின்னர், தன்னைத் தானே சுட்டுக் கொண்டதாகவும், பின்னர் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து விட்டதாகவும் மொண்டெனேகுரோவின் உள்துறை அமைச்சர் டானிலோ சரனோவிக் அரச ஒளிபரப்பாளரான RTCG இடம் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கி ஏந்திய நபர் செட்டின்ஜே (Cetinje) நகரில் அமைந்துள்ள மதுபானசாலையின் உரிமையாளரை முதலில் சுட்டுக் கொன்றார், பின்னர் அவரது குழந்தைகள் மற்றும் அவரது சொந்த குடும்ப உறுப்பினர்கள் மீதும் துப்பாக்கி சூடு நடத்தியதாக உள்துறை அமைச்சர் டானிலோ சரனோவிக் கூறினார்.
துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்த 4 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம், இந்த துப்பாக்கிச் சூடு, திட்டமிட்ட குற்றத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படவில்லை என்று பொலிஸார் கூறுகின்றனர்.
சிறிய பால்கன் நாட்டில் வெகுஜன துப்பாக்கிச் சூடுகள் ஒப்பீட்டளவில் அரிதானவை.
இறுதியாக கடந்த 2022 ஆம் ஆண்டில், செட்டின்ஜேயில், இரண்டு குழந்தைகள் மற்றும் ஒரு துப்பாக்கிதாரி உட்பட 11 பேர் வெகுஜன துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.