குசல் ஜனித் பெரேராவின் அதிரடியான சதத்துடன் நியூஸிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 218 ஓட்டங்களை குவித்துள்ளது.
நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணியானது நியூஸிலாந்துடன் தற்சமயம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.
முன்னதாக நடைபெற்ற முதலிரு போட்டிகளிலும் நியூஸிலாந்து வெற்றி பெற்று தொடரை 2:0 என்ற கணக்கில் தன்வசப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் டி20 தொடரின் மூன்றாவதும் இறுதியுமான ஆட்டம் இன்று (02) நெல்சனில் அமைந்துள்ள சாக்ஸ்டன் ஓவல் மைதானத்தில் ஆரம்பமானது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பினை இலங்கைக்கு வழங்கியது.
அதற்கிணங்க முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 218 ஓட்டங்களை குவித்தது.
இலங்கை அணி சார்பில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய குசல் ஜனித் பெரேரா 46 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகள் அடங்கலாக 101 ஓட்டங்களை பெற்றார்.
அவருக்கு அடுத்தபடியாக அணித் தலைவர் சரித அசலங்க 24 பந்துகளில் 46 ஓட்டங்களை பெற்றார்.
இதன் மூலம் நியூஸிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 219 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.