அனுமன் கோவில்களில் அனுமனுக்கு வடைமாலை சாற்றுவதை பார்த்திருப்போம். இதற்கு பின் இருக்கும் காரணம் என்னவென்று தெரியுமா?
வாயுதேவனுக்கும், அஞ்சனாதேவிக்கும் பிறந்தவர்தான் அனுமன். ஆஞ்சநேயர் சிறுகுழந்தையாக இருந்தபோது தனது தாய் அஞ்சனையிடம், ‘எனக்கு பசிக்கிறது என்றால் நீ உணவு தருகிறாய். நீ என் அருகில் இல்லாத சமயத்தில் எனக்கு பசி வந்தால் நான் என்ன செய்வது?’ என்று குழந்தைத்தனமாக கேட்டுள்ளார். அதற்கு அவரது தாய் அஞ்சனை, ‘பழங்களை பறித்து சாப்பிடு’ என்று கூறினார். இதைக் கேட்ட ஆஞ்சநேயர், ‘பழம் பார்ப்பதற்கு எப்படியிருக்கும்?’ என்று கேட்டுள்ளார். அதற்கு அஞ்சனாதேவி, ‘பழம் சிகப்பாக இருக்கும்’ என்று பதிலளித்தார்.
ஒருநாள் வானத்தில் சிவந்திருந்த சூரியனை பார்த்தார் ஆஞ்சநேயர். ‘இதுதான் அம்மா கூறிய பழம் போலிருக்கிறது. அது எப்படியிருக்கிறது என்று சுவைத்து பார்ப்போம்’ என்று சூரியனை துரத்த ஆரம்பித்தார் ஆஞ்சநேயர். வாயுபகவானின் மைந்தனான அனுமன் விண்ணில் வாயு வேகத்தில் பறக்க ஆரம்பித்தார். அதே சமயத்தில் ராகுவும் சூரியனைப் பிடித்து கிரகணத்தை ஏற்படுத்த சென்று கொண்டிருந்தார்.
வாயு மைந்தனின் வேகத்திற்கு ராகுவால் ஈடுக்கொடுக்க முடியவில்லை. தன்னைவிட வேகமாக செல்லும் அனுமனின் வேகத்தையும், வீரத்தையும் கண்டு பிரம்மித்தார். ராகு பகவான் அனுமனிடம், ‘நான் சூரியனைப் பிடித்து கிரகணத்தை ஏற்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. என்னால் உன் வேகத்திற்கு ஈடுகொடுத்து போட்டிப்போட முடியாது. உன் வேகத்தை குறைத்துக்கொள் என்று கேட்டார்.
மேலும் எனக்கு உகந்த தானியமான கருப்பு உளுந்தினால் வடை செய்து அந்த மாலையை எவர் ஒருவர் அனுமனாகிய உனக்கு படைத்து வணங்குகிறார்களோ அவர்களை எந்த காலத்திலும் நான் பிடிக்கமாட்டேன். என்னால் அவர்களுக்கு ராகு தோஷம் ஏற்பட்டிருந்தாலும், அது உடனே நீங்கிவிடும்’ என்று வரமளித்தார்.
அனுமனுக்கு வடைமாலை சாற்றி வேண்டிக்கொள்வதால், ராகு பகவானால் ஏற்பட்ட தோஷம் நீங்கும், மனதளவில் தைரியம் இல்லாமல் இருப்பவர்களுக்கு தைரியம் தோன்றும், எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும், உடல் ஆரோக்கியம் மேம்பட்டு எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள் என்று சொல்லப்படுகிறது.