டெல்லி மற்றும் அதன் அண்டை பகுதிகள் உட்பட வட இந்தியாவின் பல பகுதிகளில் கடுமையான குளிர் அலையானது வெள்ளிக்கிழமை (03) காலை தொடர்ந்தது.
குறித்த பகுதிகளை மூடிய கடுமையான பனி நிலைமையால் ரயில் மற்றும் விமான செயற்பாடுகளும் பெரும் பாதிப்பினை எதிர்கொண்டன.
விமான கண்காணிப்பு இணையதளமான ஃப்ளைட்ராடரின் (Flightradar) கூற்றுப்படி,
டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் குறைந்தது 60 புறப்படும் விமானங்கள் தாமதமாகிவிட்டதாகவும், ஆறு விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 193 விமானங்களின் வருகை தாமதமானதுடன் நான்கு விமானங்களின் வருகை இரத்து செய்யப்பட்டுள்ளன.
கொல்கத்தா விமான நிலையத்தில், புறப்படும் 17 விமானங்கள் தாமதமானது, ஒன்று இரத்து செய்யப்பட்டது மற்றும் 36 வரும் விமானங்களும் தாமதமாகின.
வெள்ளிக்கிழமை காலை டெல்லி விமான நிலையத்தில் ஓடுபாதைத் தெரிவுநிலை பூஜ்ஜியமாக இருந்தது, மேலும் விமான நடவடிக்கைகளுக்கு இடையூறுகள் ஏற்படக்கூடும் என்று விமான நிலைய அதிகாரிகள் எச்சரித்தனர்.
அதேநேரம், பனிமூட்டம் காரணமாக நீண்ட தூர சேவைகள் உட்பட குறைந்தது 24 ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட சேவைகளில் கர்னாடாக மற்றும் பீகார் சம்பார்க் கிராந்தி எக்ஸ்பிரஸ், பதிண்டா-பலூர்காட் ஃபராக்கா எக்ஸ்பிரஸ், ஆந்திரா எக்ஸ்பிரஸ், அயோத்தி எக்ஸ்பிரஸ் உள்ளிட்டவையும் அடங்கும்.
இதேவேளை பனிமூட்ட நிலைமையால் பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் தனியார் பஸ்ஸொன்று, டிரக்குடன் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் 20 முதல் 25 பயணிகள் காயம் அடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.