தென் கொரிய அதிகாரிகள் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி யூன் சுக் யோலைக் (Yoon Suk Yeol) கைது செய்யும் முயற்சியை இடைநிறுத்தியதுடன், பாதுகாப்புப் படையினருடன் சுமார் ஆறு மணி நேர மோதலுக்குப் பின்னர் சியோலில் உள்ள அவரது இல்லத்தை விட்டு வெளியேறினர்.
உயர்மட்ட அதிகாரிகளுக்கான ஊழல் விசாரணை அலுவலகம் (CIO) வெள்ளிக்கிழமை (03) பிற்பகல் 1:30 மணிக்கு யூன் சுக் யோலுக்கு எதிரான பிணையானை உத்தரவை நிறைவேற்றுவதை கைவிடுவதாக கூறியது.
அதன் புலனாய்வாளர்கள் யூனைத் தடுத்து வைப்பதற்காக ஜனாதிபதி இல்லத்தில் மேற்கொண்ட சுமார் ஆறு மணி நேர போராட்டத்துக்கு பின்னர் இந்த அறிவிப்பு வெளிவந்தது.
கடந்த டிசம்பர் 3 ஆம் திகதி இராணுவச் சட்டத்தை விதிக்க முயற்சித்ததற்காக தென் கொரியாவின் இடைநீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி யூன் சுக் யோலுக்கு (Yoon Suk Yeol) எதிராக கடந்த ஞாயிற்றுக்கிழமை புலனாய்வாளர்கள் கைது செய்ய பிடியாணை உத்தரவினை நாடினார்.
கிளர்ச்சி மற்றும் தேசத்துரோக குற்றச்சாட்டுகள் தொடர்பாக பல விசாரணைகளை எதிர்கொண்டுள்ள யூன், கடந்த இரண்டு வாரங்களாக விசாரணைக்கு ஆஜராகுமாறு மூன்று அழைப்பாணைகளை புறக்கணித்ததன் அடிப்படையில் இந்த பிடியானை உத்தரவு கோரப்பட்டது.
இதையடுத்து யூனை கைது செய்து விசாரணை மேற்கொள்ள சியோல் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதேவேளை, யூனின் பதவி நீக்கத்தை எதிர்த்தும் அவர் கைது செய்யப்படுவதைத் தடுப்பதற்கும் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் அண்மைய நாட்களில் ஜனாதிபதி இல்லத்திற்கு வெளியே திரண்டிருந்தனர்.
இந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை காலை புலனாய்வாளர்கள் யூனைக் காவலில் வைப்பதற்கும், ஜனாதிபதி இல்லத்தைத் தேடுவதற்கும் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவுக்கு அமைவாக பணிகளை ஆரம்பித்திருந்தனர்.
எனினும், ஜனாதிபதி இல்ல பாதுகாப்புப் பகுதிகள் மீதான கட்டுப்பாடுகளை மேற்கோள் காட்டிய ஜனாதிபதி பாதுகாப்பு சேவை அதிகாரிகள், பிடியாணையை நிறைவேற்ற விடாது புலனாய்வாளர்களை தடுத்து நிறுத்தியதுடன் அவர்களுடன் கடும் வாதப் பிரதிவாதங்களையும் மேற்கொண்டிருந்தனர்.
ஜனாதிபதி பாதுகாப்பு சேவை அதிகாரிகளை எதிர்கொள்வதற்கு முன்னதாக புலனாய்வார்கள், ஜனாதிபதி இல்லத்துக்கு வெளியே திரண்டிருந்த யூனின் பெருந்திரளான ஆதரவாளர்களினதும், இராணுவப் பிரிவினரதும் கடும் எதிர்ப்புகளையும் எதிர்கொண்டனர்.
எவ்வாறெனினும், பின்னர் யூனை கைது செய்வதற்கான முயற்சியை உயர்மட்ட அதிகாரிகளுக்கான ஊழல் விசாரணை அலுவலக புலனாய்வாளர்கள் இடைநிறுத்தினர்.
யூனின் இராணுவச் சட்ட முயற்சியில் தோல்வியுற்றது குறித்து கூட்டு விசாரணை நடத்த பிடியாணை செயல்படுத்தும் குழுவில் உயர்மட்ட அதிகாரிகள் (CIO) பொலிஸ் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் விசாரணைப் பிரிவுடன் இணைந்துள்ளனர்.
பிடியாணையை செயல்படுத்தும் குழுவில் CIO வைச் சேர்ந்த 30 பேரும் 120 பொலிஸ் பணியாளர்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினும், தற்போதைய பிடியாணை உத்தரவு காலாவதியாகும் முன் யூனைக் கைது செய்ய விசாரணை அதிகாரிகளுக்கு ஜனவரி 6 வரை அவகாசம் உள்ளது.