அண்மையில் ஐரோப்பாவில் வசிக்கும் பிரபல்யமான ஒரு எழுத்தாளர் என்னைக் காண வந்திருந்தார். அவரை அழைத்துக் கொண்டு வந்தவர் ஒரு இளம் அரச ஊழியர். என்னுடைய மாணவர். அவர் சொன்னார்,தான் வெளிநாட்டுக்குப் போக போவதாக.ஏன் நாட்டில் இருந்து உழைக்க முடியாது என்று நம்புகிறீர்களா என்று கேட்டேன். “ஓம் நான் ஒரு வீடு கட்டினேன். கிட்டத்தட்ட மூன்று மில்லியன் ரூபாய்கள் கடன்.கடனை அடைக்க என்னுடைய மாதச் சம்பளத்திலிருந்து பெரிய தொகை போகிறது. அதனால் வீட்டுச் செலவுகளுக்கு அம்மாவும் அப்பாவும் ஒரு கடை வைத்திருக்கிறார்கள். அந்தக் கடைக்கான முதலீடு கூட புலம்பெயர்ந்த நண்பர்கள் சிலர் தந்தது தான்.ஒரு அரச ஊழியனாக என்னால் அந்தக் கடனைக் கட்டி முடிப்பது கடினமாக உள்ளது.ஆனால் புலம்பெயர்ந்த தமிழர்களைப் பொறுத்தவரை அது ஒரு சிறு காசு.என்ற படியால்தான் ஒரு கடனாளியாகவே இருப்பதை விடவும் புலம் பெயரலாம் என்று முடிவெடுத்தேன்.”என்று சொன்னார்.
அப்பொழுது அவரோடு வந்த எழுத்தாளர் சொன்னார், அவர் சொல்வது சரி. ஊரில் ஒரு செத்த வீடு. என்னுடைய வயதுக்காரர் பலர் வந்திருந்தார்கள். பெரும்பாலானவர்கள் கிழடு தட்டி பற்களும் விழுந்து வயதை விட கூடுதலான அளவுக்கு முதியவர்களாகக் காணப்பட்டார்கள். வாழ்க்கை அவர்களுக்கு கடுமையானதாக சுமையானதாக மாறிவிட்டது போலும்.” என்று. அதாவது தமது அன்றாடச் செலவுகளைச் சமாளிப்பதற்கு கஷ்டப்படும் ஒரு வாழ்க்கை.ஒரு சுமையாக மாறிய வாழ்க்கை.
கடந்த மாதம் நடுப்பகுதியளவில் வந்த புள்ளி விவரங்களின்படி, முழு நாட்டிலிருந்தும் 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் தொழில் தேடி புலம்பெயர்ந்து விட்டார்கள். இவர்களில் எத்தனை விகிதத்தினர் நாட்டில் தொழில் துறைகளோடு இருந்தவர்கள் என்பதும், எத்தனை விகிதத்தினர் தமிழர்கள் என்பதும் தெரியவில்லை.ஆனால் முழு நாட்டிலிருந்தும் வெளியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
இந்த ஆண்டின் முடிவு வரை 20 லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்திருக்கிறார்கள். இருபதாவது லட்சம் ஆள் தாய்லாந்தில் இருந்து வந்த ஒரு ஊடகவியலாளர். அதை சம்பந்தப்பட்ட இலங்கை அமைச்சுக் கொண்டாடியது.
கொண்டாடட்டும்.ஒருபுறம் சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கம்.இன்னொரு புறம் மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலில் இருந்து தப்பி ஓடுவது போல ஆயிரக்கணக்கானவர்கள் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். அவ்வாறு வெளியேறும் பலரும் படித்தவர்கள், பட்டதாரிகள்,குறிப்பாக சுகாதார,மருத்துவத் துறை சார்ந்தவர்கள்.
தமிழ் மக்கள் மத்தியில் மூன்றாவது புலப்பெயர்ச்சி அலை ஒன்று நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இவர்களில் சிறு தொகையினர் திரும்பி வருகிறார்கள் என்பது இந்த மூன்றாவது புலப்பெயர்ச்சி அலையின் பண்புகளில் ஒன்று.
நாடு பொருளாதார ரீதியாக முன்னரை விடக் கூடுதலாக முன்னேறியிருப்பதாக அரச புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த நாட்டிலிருந்து உழைக்க முடியாது என்று நம்புபவர்களின் எண்ணிக்கை இன்னமும் குறையவில்லை.
இலங்கைத் தீவைப் போலவே பொருளாதார நெருக்கடி வந்த கிரீஸ், அர்ஜென்டினா ஆகிய இரண்டு நாடுகளிலும் கிரீஸ் ஒப்பீட்டளவில் முன்னேறியிருப்பதாக அண்மைக்காலப் புள்ளி விவரங்கள் தெரிவித்தன. ஆனால் அர்ஜென்டினா இப்பொழுதும் தடுமாறுவதாகத் தெரிகிறது.
பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட நாடுகளில் ஒரு குறுகிய காலப்பகுதிக்குள் தொடர்ச்சியாக அரசாங்கங்கள் மாறியிருக்கின்றன. அல்லது நிதியமைச்சர்கள் மாற்றப்பட்டு இருக்கிறார்கள்.அர்ஜென்டினா, கிரேக்கம் ஆகிய நாடுகளில் அரசாங்கங்கள் அடிக்கடி மாறின.நிதியமைச்சர்கள் மாற்றப்பட்டார்கள். நாடு மறுபடியும் நிமிர்ந்து நிற்க பல மாதங்கள் எடுத்தன. உதாரணமாக,கிரேக்கத்தில் ஐந்துஆண்டுகளுக்குள் எழு தடவைகள் அரசாங்கம் மாறியது.அர்ஜென்டினாவில் ஐந்து தடவைகள் அரசாங்கம் மாறியது. ஐந்து தடவைகள் நிதியமைச்சர்கள் மாற்றப்பட்டார்கள்.
இலங்கைத் தீவிலும் கடந்த நாலாண்டு காலப் பகுதிக்குள் மூன்று அரசாங்கங்கள் வந்துவிட்டன.நான்கிற்கு மேற்பட்ட நிதியமைச்சர்கள் வந்துவிட்டார்கள். பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட எல்லா நாடுகளிலும் இதுதான் நிலைமை.
இப்பொழுது நாட்டை ஆளும் என்பிபி அரசாங்கம் நிரந்தரமானதா இல்லையா என்பது அது பொருளாதாரத்தை எந்தளவுக்கு நிமிர்த்தும் என்பதில்தான் தங்கி இருக்கிறது.அது எந்த அளவுக்கு பேரரசுகளின் இழு விசைகளுக்குள் தன்னைச் சுதாகரித்துக் கொள்ளப் போகிறது என்பதில்தான் தங்கியிருக்கின்றது. என்பிபிக்குக் கிடைத்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பார்த்துப் பிரமிக்கும் பலரும் ஒரு விடயத்தை மறந்து விடுகிறார்கள். என்பிபி பெற்ற வெற்றி என்பது ஒரு விதத்தில் பொருளாதார நெருக்கடியின் விளைவு. எனவே பொருளாதார நெருக்கடியைத் தீர்க்கவில்லை என்றால் இந்த வெற்றி தோல்வியாக மாற முடியும்.அவ்வாறு பொருளாதார நெருக்கடியைக் கையாளாமல் இனப்பிரச்சனை தீர்வைக் குறித்தோ,அதற்காக யாப்பை மாற்றுவது குறித்தோ என்பிபி அரசாங்கம் சிந்திக்குமா?
பொருளாதார நெருக்கடி ஓரளவுக்கு தணிந்தாலும் இப்போதிருக்கும் அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் கடைசிப் பகுதியில்தான் அவர்கள் அவ்வாறு சிந்திக்கலாம். அதாவது பொருளாதார நெருக்கடியை ஓரளவுக்குத் தணித்த பின்தான் இனப்பிரச்சினைக்கான தீர்வைப் பற்றி யோசிக்கலாம் என்ற நிலைமை உண்டு.
இலங்கையைப் போலவே பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட கிரீசில் நிலைமை முன்னேறி வருவதாக அண்மைய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கிரீஸ், தனது கடன் பொறுப்புகளை நிறைவேற்ற முடியவில்லை என்று 2010 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனால் அது வங்குரோத்தாகிய நாடாக அறிவிக்கப்பட்டது. கிரீஸ் தனது அரசுக் கடனை திருப்பி செலுத்த முடியாமல் போனதால், ஐரோபிய ஒன்றியம் (EU), ஐரோப்பிய மத்திய வங்கி (ECB), சர்வதேச நாணய நிதிய (IMF) ஆகியவற்றால் மீட்புத் திட்டங்கள் வழங்கப்பட்டன.
கிரீஸ், தனது பொருளாதார வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டு வருவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டியுள்ளது. 2023ஆம் ஆண்டு 40% வளர்ச்சியுடன்,2024இல் Athens General Stocks Index (ATG) 13.1% உயர்ந்துள்ளது.கிரீஸின் பொருளாதாரம், 2025 இல் 2.3% வளர்ச்சியை எட்டுமென ஐரோப்பியக் கமிஷன் கணித்திருக்கின்றது.
ஆனால் கிரேக்கத்தின் கதையும் இலங்கைத் தீவின் கதையும் ஒன்றல்ல. இலங்கைத் தீவின் பொருளாதார நெருக்கடி என்பது அரசியல் காரணங்களால் ஏற்பட்டது. ஜேவிபி கூறுவது போல, அல்லது ஏனைய தென்னிலங்கைக் கட்சிகள் கூறுவது போல, அரச மயப்பட்ட ஊழல், அரச மயப்பட்ட மோசடி போன்றவற்றின் காரணமாக ஏற்பட்ட ஒன்று அல்ல.அது இனப்பிரச்சினையின் விளைவு. தென்னிலங்கை கட்சிகள் எவையும் அதனை இன்றுவரை ஏற்றுக்கொள்ளவில்லை. கட்சிகள் மட்டுமல்ல, சிங்கள அறிவு ஜீவிகளே அதை ஏற்றுக் கொள்ளவில்லை. இனப் பிரச்சினையைத் தீர்க்காமல் பொருளாதார நெருக்கடியை முழுமையாகத் தீர்க்க முடியாது. உடனடிக்கு பொருளாதார நெருக்கடியின் மோசமான விளைவுகளில் இருந்து நாட்டை காப்பாற்றலாமே தவிர பொருளாதார நெருக்கடியை முழுமையாகத் தீர்ப்பது என்றால், இலங்கைத் தீவின் இன ஐக்கியம் பாதுகாக்கப்பட வேண்டும். இன ஐக்கியத்தைப் பாதுகாப்பது என்று சொன்னால் இலங்கைத் தீவின் பல்லினத்தன்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும். தமிழ் மக்கள் இறைமையும் சுய நிர்ணய உரிமையும் கொண்ட ஒரு தேசம், தேசிய இனம் என்பதனை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அவ்வாறு இனப் பிரச்சினைக்கான அடிப்படைக் காரணத்தை ஏற்றுக்கொண்டு அதைத் தீர்ப்பதற்கான அடிப்படை கட்டமைப்புசார் மாற்றங்களை செய்தால்தான் இனப்பிரச்சினையைத் தீர்க்கலாம். இனப்பிரச்சினையைத் தீர்த்தால்தான் பொருளாதார நெருக்கடியை முழுமையாகத் தீர்க்கலாம்.
ஆனால் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முன் பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க வேண்டும் என்று என்பிபி அரசாங்கம் சிந்திக்கின்றது.அனுர மட்டுமல்ல சிங்கள பௌத்த அரசு கட்டமைப்பும் அப்படித்தான் சிந்திக்கின்றது.எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் அப்படித்தான் சிந்திக்கும்.
இனப்பிரச்சினையைத் தீர்க்காமல் பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க முயல்வது என்பது வலி நிவாரணி அரசியல்தான். அதாவது உடலில் ஏற்பட்ட காயத்துக்கு உள் மருந்து கொடுக்காமல் காயத்தைக் கழுவி மருந்து கட்டுவது போன்றது.
அனுர அரசாங்கம் அதைத்தான் செய்யும்.அதற்கு மேல் போய் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பு அனுமதிக்காது. குறிப்பாக மகா சங்கம் இப்போதைக்கு அனுமதிக்காது. எனவே பொருளாதார நெருக்கடியை எப்படிச் சமாளிக்கலாம் என்றுதான் என்பிபி அரசாங்கம் சிந்திக்கும். நாட்டை முதலீட்டு கவர்ச்சி மிக்கதாகக் கட்டி எழுப்புவதென்றால் முதலில் அதனை இன முரண்பாடுகள் இல்லாத ஒரு நாடாகக் கட்டியெழுப்ப வேண்டும். தமிழ் மக்கள் அரசாங்கத்துக்கு வாக்களித்ததை வைத்து இனப்பிரச்சினை தீர்ந்து விட்டது என்றும் முரண்பாடு நீங்கி விட்டது என்றும் கற்பனை செய்யக்கூடாது.
ஸ்ரீலங்காவை கிளீன் செய்வது நல்லது. ஆனால் சிறீலங்காவின் அரசியல் கறை அதாவது உண்மையான கறை எது? இன முரண்பாடுகள்தான் அந்தக் கறை. அதை அகற்றாமல் நாட்டின் அரசியல் கலாசாரத்தைக் கிளீன் பண்ண முடியுமா?