வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் வெள்ளம் சூழ்ந்த நிலக்கரிச் சுரங்கத்தில் சிக்கியுள்ள சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் பணியில் இந்திய மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
சுரங்கத்தில் சிக்கிக் கொண்ட ஒன்பது தொழிலாளர்களில் மூவர் உயிரிழந்து விட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அசாமின் திமா ஹசாவ் மாவட்டத்தில், பெயர் பெற்ற பகுதியான உம்ராங்சோவின் 3 கிலோ பகுதியில் ‘எலி வளை’ நிலக்கரி சுரங்கத்தில் திடீர் வெள்ளம் புகுந்ததால் திங்களன்று (06) இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
சுரங்கத்தில் சிக்கியுள்ள ஆறு தொழிலாளர்களை மீட்கும் பணிகளை இராணுவம், தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) உள்ளிட்ட பல அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றன.
2014 முதல் இந்தியாவில் இதுபோன்ற சுரங்கங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும், அஸ்ஸாம் மற்றும் பிற வடகிழக்கு மாநிலங்களில் சிறிய சட்டவிரோத சுரங்கங்க அகழ்வு செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்தியாவின் வடகிழக்கில் சுரங்கம் தொடர்பான பேரழிவுகள் அசாதாரணமானது அல்ல.
2018 டிசம்பரில் அண்டை மாநிலமான மேகாலயாவில் உள்ள ஒரு சட்டவிரோத சுரங்கத்துக்குள் பெருக்கெடுத்து ஓடிய ஆற்றுத் தண்ணீர் புகுந்ததால் குறைந்தது 15 பேர் அதில் சிக்கிக் கொண்டனர்.
அவர்களில் ஐந்து சுரங்கத் தொழிலாளர்கள் தப்பிக்க முடிந்தது, ஆனால் மற்றவர்களுக்கான மீட்பு முயற்சிகள் 2019 மார்ச் முதல் வாரம் வரை நீடித்த நிலையில் இரண்டு உடல்கள் மாத்திரம் மீட்கப்பட்டிருந்தன.
2024 ஜனவரியில் நாகாலாந்து மாநிலத்தில் எலி வளை நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தகத்கது.
(‘எலி வளை’ சுரங்கப் பணி என்பது சிறிய குழிகளைத் தோண்டி, அதன்மூலம் நிலக்கரியை எடுக்க பயன்படுத்தப்பட்ட நடைமுறையாகும்)