மன்னார், நீதிமன்றத்துக்கு முன்பாக இன்று காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் மரணமடைந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வருகைத் தந்த இருவரே இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாக்குதலில் படுகாயமடைந்த இருவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் வழியிலேயே உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த துப்பாக்கிச் சூட்டில் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் படுகாயமடைந்த நிலையில், மன்னார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்கள் மன்னார் நொச்சிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 61 வயதுடைய சவேரியன் அருள் மற்றும் 42 வயதுடைய செல்வக்குமார் யூட் எனத் தெரியவந்துள்ளது. படுகாயம் அடைந்த ஆண் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
மன்னார், நொச்சிக்குளம் பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு இரட்டைப் படுகொலை சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று மன்னார் நீதிமன்றில் நடைபெற்ற நிலையில், இதில் முன்னிலையான தரப்பினரை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலை அடுத்து நீதிமன்ற வளாகத்தை சூழ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு, வீதிகளும் மூடப்பட்டு பொலிஸாரினால் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச் சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மன்னார் பொலிஸார் இது தொடர்பான தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.