2024 ஆம் ஆண்டில் வயநாடு நிலச்சரிவு உட்பட 26 உலகளாவிய இயற்கை அனர்த்தங்கள் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டவை என ஐநா சபை அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஜூலை 2024 இல், கேரளாவின் வயநாட்டில் உள்ள சூரல்மலை மற்றும் முண்டகை பகுதிகளில் கனமழையால் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் 350 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்ததோடு ஆயிரக்கணக்கானோர் தங்கள் சொத்துக்களை இழந்தனர்.
ஐக்கிய நாடுகளின் பேரிடர் அபாயக் குறைப்பு அலுவலகம் (UNDRR), சர்வதேச காலநிலை மையத்துடன் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பேரழிவுகள் மற்றும் அவற்றின் விளைவுகளை காலநிலை மாற்றம் தீவிரப்படுத்தி வருவதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
அதில் கடந்த 2024 ஆம் ஆண்டில் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட நிகழ்வுகளில் 3,700 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் அதிலும் வயநாடு நிலச்சரிவு உள்ளிட்ட 26 குறிப்பிடத்தக்க வானிலை நிகழ்வுகளில் இலட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் காலநிலை மாற்றத்தின் காரணமாக 2024 ஆம் ஆண்டில் உலகளாவிய சராசரியாக, கூடுதலாக 41 நாட்கள், ‘ஆபத்தான வெப்பம்’ பதிவாகி உள்ளது.
எல் நினோ போன்ற இயற்கை நிகழ்வுகளை விஞ்சி, கடந்த ஆண்டின் பல தீவிர வானிலை நிகழ்வுகளில் காலநிலை மாற்றம் மிகவும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வரலாறு காணாத வகையில் அமேசானில் ஏற்பட்ட வறட்சி இதை பிரதிபலிக்கும் ஒரு எடுத்துக்காட்டாகும். மனித பயன்பாட்டால் ஏற்படும் புவி வெப்பமயமாதல் காலநிலை மாற்றத்திற்கான முக்கிய காரணமாக அறிக்கை குறிப்பிடுகிறது.