2025ஆம் ஆண்டு நிறைவடைவதற்கு முன்னர், பெருந்தோட்ட தொழிலாளர்களுக்காக அரசாங்கம் 4, 350 வீடுகளை
நிர்மானிக்கவுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அரசாங்கத்தினால் குத்தகைக்கு விடப்பட்டுள்ள பெருந்தோட்ட நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுடன், இடம்பெற்ற கலந்துரையாடலின் போது பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
பெருந்தோட்ட மக்களின் உள்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்து, அவர்களை வறுமை நிலையில் இருந்து மீட்டெடுபப்பதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் தோட்ட மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை தங்களது அரசியல் நட்பு வட்டத்தின் கீழ் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்ததாகவும் பிரதி அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.
எனவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் அமைக்கப்படவுள்ள புதிய வீடுகள், தோட்டப் புறங்களில் வாழும் உரிய பயனாளிகளுக்கு மாத்திரம் வழங்கப்படும் எனவும் பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன் 10 ஆயிரம் இந்திய வீட்டுத் திட்டத்தின் கீழ் 1,300 வீடுகள் மாத்திரமே நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் 2025 ஆண்டு முடிவதற்குள் 4,350 வீடுகளும் 2026 வருடத்துக்குள் மேலும் 4,350 வீடுகளும் நிர்மாணிக்கப்பட்டு, அவை தோட்ட மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் எனவும் பிரதி அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.