2021 ஜனவரி 6 அன்று, அமெரிக்க கேபிட்டலில் நடந்த கலவரத்திற்குப் பின்னர் ட்ரம்பின் கணக்குகளை இடைநிறுத்த சமூக ஊடக நிறுவனம் எடுத்த முடிவு தொடர்பாக, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நான்கு வருட வழக்கைத் தீர்ப்பதற்கு 25 மில்லியன் டொலர் செலுத்துவதாக மெட்டா புதன்கிழமை (29) கூறியது.
கேபிடல் கலவரத்திற்குப் பின்னர் தனது கணக்குகளை இடைநிறுத்தியதற்காக 2021 இல் சமூக ஊடக நிறுவனம் மற்றும் அதன் தலைமை நிர்வாகி மார்க் ஜுக்கர்பெர்க் மீது ட்ரம்ப் வழக்கு தொடர்ந்தார்.
2024 ஜூலையில் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக ட்ரம்பின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளுக்கான இறுதிக் கட்டுப்பாடுகளை மெட்டா நீக்கியது.
இந்த நிலையில் அமெரிக்க செய்தி நிறுவனமான ‘The Wall Street Journal’ மூலம் மேற்கண்ட வழக்குத் தீர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
தீர்வின் சுமார் 22 மில்லியன் டொலர்கள் ட்ரம்பின் ஜனாதிபதி நூலகத்திற்கான நிதிக்கு செல்லும்.
மீதமுள்ள தொகை சட்டச் செலவுகள் மற்றும் வழக்கில் கையெழுத்திட்ட ஏனைய வாதிகளுக்குப் பயன்படுத்தப்படும்.
நிறுவனம் 2021 இல் ட்ரம்பின் கணக்குகளை இடைநிறுத்தியது மற்றும் அவரை மேடைகளில் இருந்து குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு தடை செய்வதாக கூறியது.
2024 நவம்பரில் ட்ரம்பின் தேர்தல் வெற்றிக்குப் பின்னர், ஜுக்கர்பெர்க் தனது புளோரிடா ரிசார்ட்டான மார்-ஏ-லாகோவுக்குச் சென்றார்.
இந்த நடவடிக்கை அவர்களின் ஒரு காலத்தில் உறைபனி உறவுகளில் ஒரு வெளிப்படையான முன்னேற்றத்துக்கான சான்றாகக் காணப்பட்டது.
அடுத்த மாதம், ட்ரம்ப்பிற்கான பதவியேற்பு நிதிக்கு மெட்டா 1 மில்லியன் டொலர் நன்கொடை அளித்தது.
ஜுக்கர்பெர்க் இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்க கேபிட்டலில் ட்ரம்பின் பதவியேற்பு விழாவில் விருந்தினராக இருந்தார் – ஏனைய உலகளாவிய தொழில்நுட்ப பில்லியனர்களுக்கு அருகில் அமர்ந்திருந்தார்.
பல ஆண்டுகளாக ட்ரம்ப், ஜுக்கர்பெர்க் மற்றும் ஃபேஸ்புக்கை மிகவும் விமர்சித்து வந்தார் – 2017 இல் தளத்தை “ட்ரம்ப் எதிர்ப்பு” என்று அழைத்தார்.
ஜனாதிபதியின் கணக்குகள் தடைசெய்யப்பட்டதை அடுத்து அவர்களது உறவு மேலும் மோசமாகியது. ட்ரம்ப் 2024 மார்ச்சில் பேஸ்புக்கை “மக்களின் எதிரி” என்று அழைத்தார்.
அதேநேரம், ட்ரம்பின் நண்பரான எலோன் மஸ்க்கிற்குச் சொந்தமான இப்போது எக்ஸ் எனப் பெயரிடப்பட்டுள்ள டுவிட்டர், 2021 ஜனவரியில் தனது தளத்திலிருந்து ட்ரம்ப்பை “நிரந்தரமாக” இடைநீக்கம் செய்தது.
பின்னர் 44 பில்லியன் டொலர்களுக்கு நிறுவனத்தை வாங்கிய மஸ்க், 2022 ஆம் ஆண்டில் ட்ரம்பின் கணக்கை மீட்டெடுத்தமையும் குறிப்படத்தக்கது.