‘தேசிய மறுமலர்ச்சிக்காக அனைவரும் அணிதிரள்வோம்’ எனும் தொனிப்பொருளில் நாட்டின் 77வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படவுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தேசிய சுதந்திர தின நிகழ்வுகளில் பங்கேற்கும் இராணுவ உறுப்பினர்களின் எண்ணிக்கை 40 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த ஆண்டு சுதந்திர தின அணிவகுப்பில் கவச வாகனங்கள் இணைத்துக்கொள்ளப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அத்தியாவசியமான செயற்பாடுகளுக்கு மாத்திரம் வரையறுத்து, மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களைக் குறைத்து, இம்முறை சுதந்திர தின விழா இடம்பெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் சுதந்திர தின நிகழ்வை பார்வையிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதேவேளை சுதந்திரத தின நிகழ்வை முன்னிட்டு கொழும்பு நகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் சில வீதிகள் மூடப்படவுள்ளன எனவும், இதன்காரணமாக குறித்த காலப்பகுதியில் சாரதிகள் மாற்றுவீதிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அது மட்டுமல்லாது நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் நாளை மூடப்படவுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.