“நாட்டின் 76 ஆண்டு கால அரசியலுக்கு, தவறான முன்னுதாரணங்களை சுட்டிக்காட்டி பெறுமதி மிக்க ஆணையை பெற்றுள்ள தேசிய மக்கள் மக்கள் சக்தி, இன்று மக்களை நிர்கதியாக்கியுள்ளதாக” எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
குருநாகல் மெல்சிறிபுர நகரில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்திருந்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்க்க அரசாங்கம் தவறியுள்ளது.
வழங்கிய வாக்குறுதிகளுக்கும் தற்போது செய்து கொண்டிருக்கும் காரியங்களுக்கு இடையில் பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன.
அரிசி, உப்பு, தேங்காய் ஆகியவற்றின் தாட்டுப்பாடுகளுக்கு ஒரு கையெழுத்தின் மூலம் தீர்வு வழங்கப்படும் என அரசாங்கம் கூறினாலும் இதுவரையில் அவ்வாறானதொரு எந்த நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுக்கப்படவில்லை. 76 ஆண்டு கால அரசியலை தவறாக விமர்சித்திருந்தனர். அதனை மக்கள் மனதில் நிலை நிறுத்தி நாட்டு மக்களை பொய்யான செய்திகளால் தவறாக வழிநடத்தி பெறுமதியான மக்கள் ஆணையைப் பெற்றுள்ளனர்.
ஆனால் இன்று மக்களை செய்வதறியா நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நாட்டில் பாரிய அரிசி தட்டுப்பாடு நிலவுகின்றது.
இந்த பற்றாக்குறைக்கு மத்தியில் நுகர்வோர், விவசாயிகள் என இருபாலரும் தோற்கடிக்கப்பட்டுள்ளனர்.
அறுவடை நேரத்திலும் கூட நெல்லுக்கான உத்தரவாத விலையை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஒரு கிலோ நெல்லுக்கு 150 ரூபா உத்தரவாத விலையை பெற்றுத் தருவோம் என அரசாங்கத்தினர் கூறினர். ஆனால் தற்போது 80 ரூபாய்க்கே சந்தையில் விற்கப்படுகின்றன. நெல்லுக்கான உத்தரவாத விலையை சட்டப்பூர்வமாக்குவோம் என்று எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு கூறியவர்களால் இன்று உத்தரவாத விலையை நிர்ணயிக்க முடியவில்லை.
நெல் கொள்வனவு செய்வதற்காக திறைசேரி ஒதுக்கிய பணத்தைக் கோருகின்ற கடிதத்தைக் கூட
வழங்க முடியாத ஆட்சியே இன்று நாட்டில் காணப்படுகிறது” இவ்வாறு எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.