அபிஷேக் ஷர்மா ஞாயிற்றுக்கிழமை (02) சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி சார்பில் தனிநபராக அதிகபட்ச ஓட்டங்களை குவித்த வீரராக மாறினார்.
மும்பை, வான்கடே மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நேற்று நடைபெற்ற டி20 போட்டியில், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் 54 பந்துகளில் 13 சிக்ஸர்கள், 07 பவுண்டரிகளை அடித்து மொத்தமாக 135 ஓட்டங்களை பெற்றார்.
இந்த இன்னிங்ஸில் 24 வயதான இளம் வீரர், 17 பந்துகளில் தனது அரைசதத்தை நிறைவு செய்தார், அடுத்த 20 பந்துகளில் சதம் விளாசினார்.
பொதுவாக இடது கை துடுப்பாட்டம் செய்யும் முறைக்கு முற்றிலும் மாறாக அவரது துடுப்பாட்ட முறை அமைந்திருந்தது.
2024 இந்தியன் பிரீமியர் லீக்கிலிருந்து, அபிஷேக் தனது இன்னிங்ஸின் ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரே கியரில் துடுப்பாட்டம் செய்வதில் பெயர் பெற்றவர்.
அவர் குறைவான பந்துகளில் மைல்கற்களை அடித்தார் என்றாலும், அபிஷேக்கின் தன்னலமற்ற இயல்பு அவரது அணிக்கு நிறைய விளையாட்டுகளை வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளது, அதேநேரம், உலகின் சிறந்த வீரர்களிடமிருந்து அவருக்கு பாராட்டுக்களையும் பெற்றுக் கொடுத்தது.
எனினும், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இங்கிலாந்துடனான ஐந்தாவது டி20 ஆட்டத்தின் போது, மூத்த இந்திய வீரர்கள் அபிஷேக் சர்மாவின் சதத்தை கருத்திற் கொண்டு, துடுப்பாட்டத்தில் வேகத்தை குறைக்குமாறு கேட்டுக் கொண்டனர்.
சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, மற்றும் அக்சர் படேல் ஆகியோர் ஒவ்வொரு பந்திலும் பெரிய ஷாட் அடிப்பதற்குப் பதிலாக, வேகத்தைக் குறைத்து தனது சதத்தை எட்டுமாறு கேட்டுக் கொண்டதாக அபிஷேக் சர்மா போட்டியின் பின்னர் கூறினார்.
போட்டிக்கு பிந்தைய நிகழ்ச்சியில் மூத்த வீரர்களுக்கு நன்றி தெரிவித்தார் அவர்.
எவ்வாறெனினும் அபிஷேக் சர்மாக நேற்றைய ஆட்டத்தில் 135 ஓட்டங்களை குவித்து டி20 போட்டிகளில் இந்திய வீரர்களின் அதிகபட்ச தனிநபர் ஓட்ட எண்ணிக்கைய எட்டினார்.
இதன் மூலம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தொடக்க ஆட்டக்காரர், பஞ்சாப் அணி வீரர் ஷுப்மான் கில்லை விஞ்சினார்.
ஷுப்மான் கில் இதற்கு முன்பு 2023 ஆம் ஆண்டில் நியூசிலாந்திற்கு எதிராக 126 ஓட்டங்களை எடுத்து சாதனை படைத்திருந்தார்.
அபிஷேக் சர்மாவின் உதவியுடன் ஐந்தாவது டி20 போட்டியில் 150 ஓட்டங்களினால் இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா, தொடரை 4:1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி எதிர்வரும் 06 ஆம் திகதி நாக்பூரில் ஆரம்பமாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.