மீனவர்கனின் பிரச்சினைக்கு இந்திய – இலங்கை கூட்டுக் குழுவொன்றை அமைத்து விரைவில் தீர்வுகாண வேண்டும் என இந்தியாவின் புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் வே.நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.
தமிழக, மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்தும் கைது செய்யப்படுவதுடன், தாக்குதலுக்கும் இலக்காகிவருவதாக வே.நாராயணசாமி குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன் தமிழக மீனவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்படுவதாக வே.நாராயணசாமி சுட்டிக்காட்டியுள்ளார். அண்மையில் இலங்கை கடற்படையின் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மீனவர்களுக்கு இலங்கையில் முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளதுடன், இலங்கையில் உள்ள இந்திய இராஜதந்திரியுடனும் தாம் கலந்துரையாடியுள்ளதாகவும் புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக தாம் கலந்துரையாடல்களை முன்னெடுத்த பின்னரே மத்திய அரசாங்கம் குறித்த துப்பாக்கிச் சூட்டுக்கு கண்டனம் தெரிவித்ததாகவும் இந்தியாவின் புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் வே.நாராயணசாமி குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.