கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 48 பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், பா.ஜ.க அரசு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பாக தவறான கணக்கைக் காட்டியுள்ளதாக தி.மு.கவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘முரசொலி’ கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. ஜனவரி 13 ஆம் திகதி தொடங்கிய இந்நிகழ்வு பெப்ரவரி 26 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதில் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி (புராண நதி) ஆகிய 3 புனித நதிகள் சங்கமிக்கும் ‘திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் புனித நீராடி வழிபட்டு வருகின்றனர்.
மௌனி அமாவாசை நாளான ஜன.29 ஆம் திகதி திரிவேணி சங்கமத்தில் லட்சக்கணக்கானோர் புனித நீராட குவிந்தனர். இதன் விளைவாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில், 30 பேர் உயிரிழந்ததாக முதல்வர் யோகி தலைமையிலான உ.பி அரசு உறுதிப்படுத்தியது.
இந்த நிலையில், கும்பமேளா கூட்ட நெரிசலில் 48 பேர் இறந்துள்ள நிலையில், மரணங்களைக் கூட மறைத்து தவறான கணக்கைக் காட்டிய உத்தரப்பிரதேச அரசை மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு பாதுகாக்கிறது என தமிழகத்தில் ஆளும் திமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘முரசொலி’ கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது.
பா.ஜ.கவுக்கு உண்மையான பக்தி இருந்திருக்குமானால்,அந்த நிகழ்வில் பங்கேற்கும் பக்தர்களுக்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். ‘ஆனால் அவ்வாறு மேற்கொள்ளப்படவில்லை. ‘கோவிலுக்கு வெளியேயும் அரசியலை மட்டுமே தங்கள் பக்தியைக் காட்டியிருக்கிறார்கள். பாஜகவும் அதனைச் சேர்ந்தவர்களும். அதனால்தான் அலட்சியமாக கும்பமேளா நடத்தி மக்களின் உயிரை பலியெடுத்து இருக்கிறார்கள்’ என்று குற்றம் சாட்டியுள்ளது.
அத்துடன் ‘சம்பவம் நடந்து 17 மணி நேரத்திற்குப் பிறகுதான், இறப்பு எண்ணிக்கையை 30 என யோகி அரசு உறுதிப்படுத்தியது’ என்றும், இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவதற்கு எதிர்க்கட்சிகளுக்கு ‘அனுமதிக்கப்படவில்லை’ என்றும் முரசொலி பத்திரினை குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.