சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்ததாக குற்றம் சாட்டப்பட்ட சுமார் 100 இந்திய பிரஜைகளை ஏற்றிச் சென்ற அமெரிக்க நாடு கடத்தல் விமானம் பஞ்சாப் மாநிலத்தில் தரையிறங்கியுள்ளது.
செவ்வாய்க்கிழமை (04) பிற்பகுதியில் டெக்சாஸிலிருந்து புறப்பட்ட இராணுவ விமானம், சற்று முன்னர் அமிர்தசரஸ் நகரில் தரையிறங்கியுள்ளது.
இந்த விமானத்தின் மூலமாக சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருந்த 13 குழந்தைகள் உட்பட 104 இந்தியர்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
ஜனவரி 20 அன்று ட்ரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்ற முதல் நாளில் குடியேற்றவாசிகளுக்கு எதிராக தொடங்கிய பாரிய அடக்குமுறையின் ஒரு பகுதியாக இவ்கள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இந்திய சட்டவிரோத குடியேறிகள் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படுவது இதுவே முதல் முறை.
டெக்சாஸின் சான் அன்டோனியோவில் இருந்து புறப்பட்ட சி-17 அமெரிக்க இராணுவ விமானம் புதன்கிழமை பிற்பகல் இந்திய நேரப்படி 1.59 மணிக்கு ஸ்ரீ குரு ராம் தாஸ் ஜீ சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.
79 ஆண்கள் மற்றும் 25 பெண்கள் அடங்கிய 104 நபர்களை வரவேற்க காவல்துறை மற்றும் சிவில் நிர்வாக அதிகாரிகள் விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.
அமெரிக்க தூதரகத்தின் பிரதிநிதியும் விமான நிலையத்தில் இருந்தார்.
ஆதாரங்களின்படி, நாடு கடத்தப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் பிடிபட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நாடு கடத்தப்பட்டவர்கள் இந்தியாவில் குற்றவாளிகள் அல்ல, ஏனெனில் அவர்கள் நாட்டை விட்டு வெளியேற சட்டப்பூர்வ வழியைப் பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள் இந்திய சட்டங்களை மீறவில்லை என்பதால் அவர்களை கைது செய்வதற்கு எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.