உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவுக்கு புதன்கிழமை (05) சென்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அங்கு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.
ருத்ராட்ச மாலையினை அணிந்து, மந்திரங்களை உச்சரித்தபடி பிரதமர் திரிவேணி சங்கமத்தில் மூழ்கி எழுந்து நீராடினார்.
இது குறித்து எக்ஸ் பதிவில் பதிவிட்ட அவர்,
இன்று, பிரயாக்ராஜ் மஹா மகாகும்பமேளா நிகழ்வில் புனித சங்கமத்தில் நீராடிய பின்னர் பூஜை-அர்ச்சனை செய்யும் பெரும் பாக்கியம் கிடைத்தது.
மா கங்கையின் ஆசீர்வாதத்தால் எனக்கு அளவற்ற அமைதியும் திருப்தியும் கிடைத்தது.
அனைத்து நாட்டு மக்களின் மகிழ்ச்சி, செழிப்பு, ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்காக நான் அவளிடம் பிரார்த்தனை செய்தேன்.
ஹர்-ஹர் கங்கே! – என்று கூறியுள்ளார்.
முன்னதாக, கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆகிய புனித நதிகளின் சங்கமமான திரிவேணி சங்கமத்தில் பிரதமர் மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் படகு சவாரி செய்தார்.
தை மாத பெளர்ணமி தினத்தில் (ஜனவரி 13) மகா கும்பமேளா நிகழ்வு ஆரம்பமானது.
இது உலகம் முழுவதிலுமிருந்து பெருந்திரளான பக்தர்களை ஈர்க்கிறது.
இது பெப்ரவரி 26 அன்று மகாசிவராத்திரி வரை தொடரும்.
கடந்த டிசம்பர் 13 அன்று பிரயாக்ராஜ் விஜயத்தின் போது, பொது மக்களுக்கான இணைப்பு, வசதிகள் மற்றும் சேவைகளை மேம்படுத்தும் வகையில் ₹5,500 கோடி மதிப்பிலான 167 வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தமையும் குறிப்பிடத்தக்கது.