சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் மூவரை விடுதலை செய்வதற்கு சட்ட மாஅதிபர் பரிந்த ரணசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.
இந்த விவகாரமானது, சமகால அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சட்டமா அதிபரின் இந்த நடவடிக்கை தொடர்பாக அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக அமைச்சரவைப் பேச்சாளரான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு எதிராக வலுக்கும் கண்டனங்கள்
சண்டே லீடர் பத்திரிகையின் சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் மூவரை விடுதலை செய்வதற்கு சட்ட மாஅதிபர் பரிந்த ரணசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.
அந்தவகையில், லசந்த விக்கிரமதுங்க படுகொலை விவகாரத்தில் சாட்சியங்களை அழித்த விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டு தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நாணயக்கார, பொலிஸ் பரிசோதகர் திஸ்ஸ சுகந்தபால மற்றும் இராணுவ புலனாய்வுப் பிரிவின் சார்ஜன்ட் மேஜர் உதலாகம ஆகியோரை இந்த வழக்கிலிருந்து முற்றாக விடுவிக்கவே சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இந்த விடயமானது சமகால அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரச தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, அமைச்சரவை ஊடகப் பேச்சாளரான நளிந்த ஜயதிஸ்ஸவிடம் இதுகுறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன.
இந்நிலையில் இது குறித்துக் கருத்துத் தெரிவித்த அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ”
2006 ஆம் ஆண்டுக்கு பின்னர் தெற்கில் மட்டுமல்ல வடக்கிலும் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பாக விசாரணை செய்து, குற்றவாளிகளுக்கு தண்டனைக் கொடுக்க வேண்டும்.
இதற்கான மக்கள் ஆணையும் எமக்கு உள்ளது. ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தலின்போதும் மக்கள் இவற்றுக்காகத்தான் எமக்கு அதிகாரத்தை வழங்கினார்கள். இதனை நாம் நன்றாக உணர்வோம். கடந்த காலங்களில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களின் கடத்தல், கொலை தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள அரசாங்கம் என்ற ரீதியில் நாம் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம்.
படுகொலையாளிகளுக்கு எதிராக சட்டம் நிச்சமயாக நடைமுறைப்படுத்தப்படும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை. இந்த நிலையில், இந்த சட்டமா அதிபரின் இந்த அறிவிப்பு தொடர்பாக அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது. ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி தொடர்பான இந்த விடயம் தொடர்பாக நாம் விரைவிலேயே அறிவிப்போம்.
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் வழங்கு நீதிமன்றத்தில் உள்ளது. இந்த படுகொலையை மூடி மறைக்க வேண்டியத் தேவை அரசாங்கத்திற்கு கிடையாது. இந்த விசாரணையில் சில தாமதங்கள் இருப்பதற்கு காரணம் தொழில்நுட்ப விடயங்களினாலேயே ஒழிய அரசாங்கத்தினால் அல்ல.
நாம் இந்த விடயத்தில் ஆரம்பத்திலிருந்தே குரல் கொடுத்து வந்த தரப்பினராகும். ஜனாதிபதி உள்ளிட்டவர்களும் லசந்த விக்கிரமதுங்கவின் மரணம் தொடர்பாக குரல் எழுப்பியுள்ளார்கள். எனவே, இந்த விடயத்திலிருந்து யாரும் தப்பிக்க முடியாது.
மக்களை ஆணைக்கு எதிராக ஒருபோதும் செயற்பட அரசாங்கம் தயார் இல்லை” இவ்வாறு நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.