”மருத்துவமனை கட்டமைப்பை மருத்துவம் மற்றும் சுகாதார சேவைகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தாமல், நோயாளர்கள் மனரீதியாக குணமடையும் இடமாகவும் மாற்ற வேண்டும்” என சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, தெரிவித்துள்ளார்.
தான் பிறந்த வைத்தியசாலையான அகலவத்த பிம்புரா மருத்துவமனைக்கு களவிஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அங்குள்ள அதிகாரிகள் மற்றும் மருத்துவமனை பணியாளர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மருத்துவமனையின் ஆய்வகம், கதிரியக்கவியல் பிரிவு, மருந்தகம், பல் சிகிச்சை பிரிவு, மயக்க மருந்து பிரிவு, மகப்பேறு பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு பிசியோதெரபி பிரிவு, ஓய்வறை, சுகாதார கல்வி பிரிவு மற்றும் சமையலறை ஆகியவற்றை பார்வையிட்ட அமைச்சர்> குறித்த மருத்துவமனையில் தற்போது மூடப்பட்டுள்ள மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவப் பிரிவு கட்டிடத்தை உடனடியாகப் புதுப்பித்து சேவைகளைத் தொடங்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன் ஒவ்வொரு மருத்துவமனையையும் சுற்றுச்சூழலின் அழகைப் பாதுகாத்து, கட்டிடக்கலையின் தனித்துவத்தை எடுத்துக்காட்டும் வகையில் மேம்படுத்தவும், அதன் மூலம் மருத்துவமனை அமைப்பை நோயாளி களுக்கு சிறந்த மனநலனை வழங்கும் இடமாக மாற்றவும் திட்டங்கள் வகுக்கப்பட்டுவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.