”தமிழர் பகுதிகளில் தமிழ் பேசும் பொலிஸ் அதிகாரிகள் பணியாற்ற வேண்டும்” என்ற கோரிக்கையை தமிழ் மக்கள் தொடர்ந்து முன்வைத்து வரும் நிலையில், இரு மொழிகளும் பேசத் தெரிந்த கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடந்த மூன்று ஆண்டுகளாக பணியாற்றிய வெதகெதர என்பவருக்கே இவ்வாறு பதுளைக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பொலிஸ் அதிகாரி தமிழ் மொழியில் திறம்பட பேசக்கூடியவர் என்பதனால், அப்பகுதி மக்கள் அவரை எளிதாக அணுகி தமது குறைகளை நிவர்த்தி செய்து வந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அவர் சட்டம் மற்றும் ஒழுங்கை பேணுவதிலும் அவர் முக்கிய பங்காற்றியுள்ளார் எனவும், இதனால் கோப்பாய் பகுதியில் இடம்பெற்று வந்த குற்றச் செயல்கள் வெகுவாகக் குறைவடைந்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அப் பகுதியில் தமிழ் பேசும் பொலிஸ் அதிகாரியின் இருப்பு பொதுமக்களுக்கு நெருக்கமான முறையில் நீதியும் பாதுகாப்பும் வழங்குவதற்கு வழிவகுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த திடீர் இடமாற்றம் அப்பகுதியில் வசிக்கும் தமிழ் மக்களிடையே குழப்பத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
இதன்காரணமாக பல பகுதிகளில் குறித்த பொலிஸ் அதிகாரியின் இடமாற்றத்தைக் கண்டித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.