இந்திய அரசின் நிதியுதவியின் கீழ் பொலன்னறுவை, கதுருவெல பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுவரும் மும்மொழியிலான தேசிய பாடசாலையின் தற்போதைய நிலை தொடர்பில் ஆராய்வதற்கான கண்காணிப்பு விஜயம் மற்றும் குறித்த பாடசாலையின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பிலான விசேட கலந்துரையாடலொன்று இன்று பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில் இடம்பெற்றள்ளது.
வலயத்தின் அனைத்து இன, மதங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சகல பிள்ளைகளுக்கும் கல்வியை பெறுவதற்கான வசதியை நோக்கமாகக் கொண்டு கட்டியெழுப்பப்பட்டுவரும் இந்தப் பாடசாலையின் நிர்மாணிப்பணிகள் பல வருடங்களாக மந்தகதியில் இடம்பெற்றமை தொடர்பில் இதன்போது பிரதமரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டிருந்தது.
அதன்படி இந்திய அரசின் நிதியுதவியின் கீழ் நிர்மாணிக்கப்படும் முன்பக்க கட்டடத்தின் பணிகள் 75% நிறைவடைந்துள்ளதுடன், அதன் மீதமுள்ள பணிகளை நிறைவு செய்வதற்கு ரூ.150 மில்லியன் செலவாகுமெனவும், இரண்டாவது கட்டடம் இலங்கை அரசின் நிதியின் கீழ் நிர்மாணிக்கப்படுவதுடன் அதன் பணிகள் 40% நிறைவடைந்துள்ளதாகவும், மீதமுள்ள பணிகளை நிறைவு செய்வதற்கு ரூ. 400 மில்லியன் தேவைப்படுவதாகவும் கட்டட நிறுவனத்தினால் சுட்டிக்காட்டப்பட்டது.
பாடசாலை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் ஒரே நேரத்தில் 1600 மாணவர்கள் கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடக்கூடிய வசதிகள் இங்கு காணப்படுவதுடன், விசேட கல்வி பிரிவு, மொழி வகுப்பறை, e-learning வகுப்பறை, விடுதி, நிர்வாக கட்டடம், ஆய்வுகூட வசதிகள், அடிப்படை வசதிகள் உட்பட ஆசிரியர் உத்தியோகபூர்வ இல்லம் உள்ளிட்ட வசதிகளைக் கொண்டதாக பாடசாலையை நிர்மாணிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக கட்டட நிறுவன பொறியியலாளர்கள் பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தார்.
இந்த வளங்கள் அழிவடைவதற்கு இடமளிக்காது, பிள்ளைகளின் கல்விக்கென அவற்றை கட்டியெழுப்புவதற்கு தேவையான பிரேரணைகள் மற்றும் திட்டங்களை உடனடியாக முன்வைக்குமாறு பிரதமரினால் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டது.
இதில் கண்காணிப்பு விஜயத்தில் வீடமைப்பு பிரதியமைச்சர் டீ.பீ.சரத், பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பத்மசிறி பண்டார, பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ரத்னசிறி, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வியமைச்சின் செயலாளர் நாலக கலுவௌ, வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச, பொலன்னறுவை மாவட்ட செயலாளர் சுஜந்த ஏக்கநாயக்க உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.