தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அழைப்புக்கு தமிழரசுக் கட்சி பதில் கூறியிருக்கிறது. அதன்படி ஒரு புதிய யாப்பை நோக்கித் தமிழ்த் தேசிய கட்சிகளை ஒன்றிணைக்கும் நோக்கத்தோடு முன்னணியால் முன்னெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பு முயற்சிகளுக்கான அழைப்பை தமிழரசுக் கட்சி நிராகரித்து விட்டது என்று கூடச் சொல்லலாம். “உரிய நேரம் வரும்போது இந்த விடயம் பற்றி நாம் கலந்துரையாடலாம்” என்ற பதில் எதைக் குறிக்கிறது? இது அதற்குரிய நேரம் இல்லை என்றுதானே பொருள்?
கட்சித் தலைமையின் நிலைப்பாடு இதுவென்றால் கட்சிக்குள் சிறீதரனின் நிலைப்பாடு என்ன? கஜேந்திரக்குமாரின் அழைப்பை ஏற்றுக்கொண்டு அவரோடு தொடர்ச்சியாக சந்திப்புகளை மேற்கொண்டவர் அவர். கட்சித் தலைமையின் நிலைப்பாட்டை மீறி அவர் தனிப்பட்ட முறையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஒருங்கிணைப்பு முயற்சிகளுக்கு ஒத்துழைக்கப் போகிறாரா இல்லையா?
இதே போல ஒரு நிலை கடந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது அவருக்கு ஏற்பட்டது.ஜனாதிபதித் தேர்தலில் கட்சியின் ஒரு பகுதி பொது வேட்பாளரை ஆதரித்தது. ஒரு பகுதி பொது வேட்பாளரை மூர்க்கமாக எதிர்த்தது.எதிர்த்த தரப்புக்கு சுமந்திரன் தலைமை தாங்கினார். ஆதரித்த தரப்புக்கு சிறீதரன் தலைமை தாங்கினார்.அதாவது தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயம் தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்ட தலைமைத்துவப் போட்டிக்குள்ளும் பிரதிபலிப்புகளை ஏற்படுத்தியது.
சிறீதரன் சுமந்திரனின் எதிர்ப்பை மீறி தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவாக நின்றார்.அவருடைய அந்த நிலைப்பாடு குறித்து இரண்டு விதமான வியாக்கியானங்கள் இருந்தன.ஒன்று அவர் தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயத்தை கோட்பாட்டு ரீதியாக ஏற்றுக்கொள்கிறார்.எனவே அதற்கு ஆதரவான ஒரு நிலைப்பாட்டை எடுத்து கட்சியின் மத்திய குழு அதை எதிர்த்த போதிலும் வெளிப்படையாக அதற்கு ஆதரவாக இயங்கினார். கிளிநொச்சியில் நடந்த பொது வேட்பாளருக்கு ஆதரவான கூட்டங்களில் அவர் பகிரங்கமாகக் காணப்பட்டார். குறிப்பாக அங்கு ஒழுங்கு செய்யப்பட்ட மிகப்பெரிய பிரச்சாரக் கூட்டத்தில் மாவை சேனாதிராஜாவும் காணப்பட்டார்.இது ஒரு வியாக்கியானம்.
இன்னும் ஒரு வியாக்கியானம் உண்டு. அது என்னவென்றால், கட்சிக்குள் ஏற்பட்ட தலைமைப் போட்டிக்குள் அவர் தன்னைப் பலப்படுத்திக் கொள்வதற்காக பொது வேட்பாளர் என்ற நிலைப்பாட்டுக்கு ஆதரவாக நின்றார் என்பது.அதாவது கட்சிக்குள் தனது பேரம்பேசும் சக்தியை பலப்படுத்துவதற்காக அவர் அவ்வாறு ஒரு முடிவை எடுத்தார் என்பது.அதாவது அவர் பொது வேட்பாளருக்கு ஆதரவாக நிலைப்பாட்டை எடுத்தார் என்பதை விடவும் தனது உட்கட்சிப் போட்டியாளராகிய சுமந்திரனுக்கு எதிரான ஒரு அணியை பலப்படுத்த விரும்பினார் என்பதே சரி என்ற வியாக்கியானம்.
எதுவாயினும் பொது வேட்பாளரை ஆதரித்ததன் மூலம் சிறிதரன் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டுக்கு நெருக்கமாக நின்றார். கட்சிக்குள் இருந்த பலமான ஒரு அணியின் எதிர்ப்பை மீறி அவர் துணிச்சலாக முடிவெடுத்தார்.பொது வேட்பாளரை எதிர்த்ததன் மூலம் சுமந்திரன் தேசத் திரட்சிக்கு எதிராக நின்றார்.
இப்பொழுதும் சுமந்திரன் தேசத் திரட்சிக்கு எதிராகத்தான் இருக்கிறார்.தமிழ்த் தேசிய அரசியல் எனப்படுவது தமிழ் மக்களை ஆகப்பெரிய திரளாகத் திரட்டுவது. கடந்த 15 ஆண்டுகளாக அவ்வாறு தமிழ் மக்களை ஒரு திரட்சியாகக் கூட்டிக் கட்டுவதற்கு எதிரான ஒரு நிலைப்பாட்டைத்தான் சுமந்திரன் எடுத்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்ததில் அவருக்குப் பெரிய பங்கு உண்டு. அதன் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் இருந்த ஆகப்பெரிய கூட்டை உடைத்தார்.
ஆயுதப் போராட்டத்தின் ஒரு கட்ட வளர்ச்சிக்குப் பின் அதில் ஏற்பட்ட பண்புரு மாற்றத்தின் விளைவாக ஏற்பட்ட அதிகம் சாம்பல்தன்மை மிக்க ஒரு கூட்டே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகும்.
விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு காலம் தன்னால் அரங்கில் இருந்து அகற்றப்பட்ட கட்சிகளையும் அமைப்புகளையும் ஏற்றுக்கொண்டதன் விளைவாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாகியது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இல்லாதொழித்ததில் சுமந்திரனுக்குப் பெரிய பங்கு உண்டு. அதன் விளைவாக தமிழரசுக் கட்சி மட்டும் மிஞ்சியது. இப்பொழுது தமிழரசுக் கட்சியும் இரண்டாகிவிட்டது. அதற்கும் சுமந்திரன் பொறுப்பு. தனது சொந்தக் கட்சிக்குள் ஒரு திரட்சியை ஏற்படுத்த முடியாத ஒரு தலைவர் எப்படித் தேசத் திரட்சியை ஏற்படுத்தலாம்? எனவே சுமந்திரன் செய்வது தமிழ்த் தேசிய அரசியல் அல்ல.
பொது வேட்பாளரில் அவர் எடுத்த நிலைப்பாடும் அதுதான். நாடாளுமன்றத் தேர்தலில் அவர் எடுத்த நிலைப்பாடும் அதுதான். கடந்த வாரம் கஜேந்திரக் குமாருக்கு சிவஞானம் அனுப்பிய பதிலும் தேசத் திரட்சிக்கு ஆதரவானது அல்ல.
தேசத் திரட்சியைப் பாதுகாக்க விட்டால் என்ன நடக்கும் என்பதற்கு நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் ஒரு பாடம். நாடாளுமன்றத் தேர்தல் தமிழரசுக் கட்சிக்கும் ஏனைய தமிழ்க் கட்சிகளுக்கும் மட்டுமல்ல சுமந்திரனுக்கும் தனிப்பட்ட முறையில் ஒரு பாடம் கிடைத்தது.தமிழ் மக்கள் அவரை நிராகரித்தார்கள்.
கடந்த ஆண்டில் சுமத்திரனுக்கு இரண்டு கசப்பான பாடங்கள் கிடைத்தன.ஆண்டின் தொடக்கத்தில் அவருடைய கட்சியாட்களே அவரை நிராகரித்தார்கள்.ஆண்டின் முடிவில் தமிழ் மக்கள் அவரை நிராகரித்தார்கள்.இந்த இரண்டு தோல்விகளிலிருந்தும் அவர் கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. இந்தத் தோல்விகளை ஏற்றுக்கொள்ள மறுத்து அவர் கட்சியைத் தொடர்ந்தும் எப்படித் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கலாம் என்று திட்டமிட்டுச் செயற்பட்டு வருகிறார்.
இப்பொழுது கட்சி படிப்படியாக அவருடைய கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது.சிறீதரனின் நிலை மேலும் கேள்விக்குள்ளாகியுள்ளது.ஆனால் சிறீதரன் தானாக கட்சியை விட்டு நீங்க மாட்டார் என்று தெரிகிறது.அப்படி என்றால் அவரை கட்சியை விட்டு நீக்குவது தான் சுமந்திரன் அணியின் அடுத்த நகர்வாக இருக்கலாம்.
ஏற்கனவே அரியநேத்திரனை நீக்கி விட்டார்கள்.தமிழரசியல் வரலாற்றிலேயே அதிக வாக்குகளைப் பெற்ற ஓர் அரசியல்வாதி அவர். பொது வேட்பாளராக அவருக்கு மூன்று மகத்துவங்கள் உண்டு. முதலாவது தமிழ் அரசியல் வரலாற்றில் அதிகம் வாக்குகளைப் பெற்ற ஒரு தமிழ் அரசியல்வாதி அவர். இரண்டாவது கிழக்கில் இருந்து வந்த ஒரு தமிழ் வேட்பாளருக்கு வடக்கே கிடைத்த ஒரு லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள். அவை தாயக ஒருமைப்பாட்டுக்கு கிடைத்த வாக்குகள்.
தமிழ்ப் பொது வேட்பாளரை முன்னிறுத்திய கருத்துருவாக்கிகளில் ஒருவர் ஓர் ஊடக முதலாளியைச் சந்தித்து உரையாடிய பொழுது அவர் கேட்டார்,கிழக்கில் இருந்து வரும் ஒரு வேட்பாளருக்கு பத்தாயிரம் வாக்குகளாவது கிடைக்குமா? என்று. தமிழ் பொது வேட்பாளருக்கு அதிகம் உதவிய அந்த ஊடக முதலாளி பின்னர் பொது வேட்பாளருக்கு கிடைத்த வாக்குகளைக் கண்டு வியந்தார். அவை தாயக ஒருமைப்பாட்டுக்கும் தேசத் திரட்சிக்கும் கிடைத்த வாக்குகள்.
அந்த வாக்குகளுக்கு மற்றொரு முக்கியத்துவம் உண்டு.கடந்த 15 ஆண்டு கால தமிழ் அரசியலில், கொழும்பின் நகர்வுகளுக்குப் பதில் வினையாற்றும் ஒரு போக்கில் இருந்து மாற்றி தமிழ் மக்கள் அதனை செயல்முனைப்போடு அணுகலாம் என்ற முன்னுதாரணம் அது. அதாவது “ப்ரோ ஆக்டிவாக” அணுகலாம் என்ற முன்னுதாரணம் அது.
அத்தகைய முன்னுதாரணத்தின் வேட்பாளர் ஆகிய அரிய நேத்திரனை கட்சியிலிருந்து நீக்கியமை என்பது தமிழரசுக் கட்சியின் மத்திய குழு தேசத் திரட்சிக்கு எதிராகத் திரும்பி விட்டது என்பதைத்தான் காட்டுகிறதா?அதற்குள் சிறீதரனைப் போன்றவர்கள் தொடர்ந்தும் இருந்து என்ன செய்யப் போகிறார்களோ தெரியவில்லை. கட்சிக்குள் தொடர்ந்தும் நிலைத்திருப்பதன் மூலம் சுமந்திரனை அகற்றலாம் என்று சிறிதரன் திட்டமிடுகிறாரோ தெரியவில்லை.
ஆனால் சுமந்திரனுக்கு எதிரான அணிகளோடு அவர் சேர்க்கைகளை வைத்துக் கொள்வதன் மூலம் கட்சிக்குள் தன்னைப் பலப்படுத்த விளைகிறார் என்பது உண்மை.பொது வேட்பாளரின் விடயத்திலும் அவர் அதைச் செய்தார். முன்னணியின் ஒன்றிணைப்பு முயற்சிகளிலும் அவர் அதைத்தான் செய்கிறார். இப்பொழுது அந்த விடயத்திலும் கட்சித் தீர்மானத்துக்கு எதிராக அவர் செயற்பட வேண்டிய நிலைமை தோன்றியிருக்கிறது. சிதறிக்கொண்டு போகும் கட்சிக்குள் தனது ஸ்தானத்தைப் பாதுகாப்பதா? அல்லது தேசத் திரட்சியைப் பாதுகாப்பதா?