வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள ஒரு இராணுவத் தளத்தில் இரண்டு தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
செவ்வாய்க்கிழமை (05) மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில் குறைந்தது 12 பேர் உயிரிழந்தனர் மற்றும் 30 பேர் காயமடைந்தனர் என்று பாகிஸ்தானிய அதிகாரிகளும், மருத்துவமனை வட்டாரங்களும் தெரிவித்துள்ளன.
கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பன்னுவில் நடந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தலிபான்களுடன் தொடர்புடைய ஒரு குழு பொறுப்பேற்றுள்ளது.
இந்த தாக்குதலில் பல பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் உயிரிழந்தாகவும் குழு கூறியது.
எனினும், இராணுவம் உடனடியாக எந்த உயிரிழப்புகளையும் உறுதிப்படுத்தவில்லை.
இரண்டு தற்கொலை குண்டுதாரிகளும் பரந்த இராணுவப் பகுதியின் சுவருக்கு அருகில் தங்களை வெடிக்கச் செய்து, தாக்குதல் நடத்தியதாக பெயர் வெளியிட விரும்பாத ஒரு பாதுகாப்பு அதிகாரி தெரிவித்தார்.
இந்த தாக்குதல் செவ்வாய்க்கிழமை சூரிய அஸ்தமனத்திற்குப் பின்னர் நடந்தது, அப்போது முஸ்லிம்களின் புனித மாதமான ரமலான் மாதத்தில் மக்கள் தங்கள் நோன்பை முடித்துக் கொண்டிருந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை ரமலான் தொடங்கியதிலிருந்து பாகிஸ்தானில் நடந்த மூன்றாவது தீவிரவாத தாக்குதல் இதுவாகும்.
தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) என்ற தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய தற்கொலை குண்டுதாரிகள், பாதுகாவலர்களின் கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்ட பின்னர் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட இரண்டு வாகனங்களை வளாகத்தின் சுற்றளவுக்குள் செலுத்திச் சென்று, பாரிய வெடிப்புகளை ஏற்படுத்தியதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
பாதுகாப்பு படையினரின் விரைவான செயற்பாட்டினால் குறைந்தது ஆறு தாக்குதல்காரர்ககள் கொல்லப்பட்டதாகவும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.