மாணவர்கள் மீதான உளவியல் அழுத்தத்தைக் குறைக்கும் நோக்கில், 2028 ஆம் ஆண்டளவில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு பதிலாக புதிய பரீட்சையொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்று (10) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
தற்போதைய புலமைப்பரிசில் பரீட்சை செயல்முறையை மறுபரிசீலனை செய்து சீர்திருத்தம் செய்ய அடுத்த ஆண்டு ஒரு நிபுணர் குழு நியமிக்கப்படும்.
இளம் மாணவர்கள் மீது ஏற்படும் தேவையற்ற அழுத்தத்தைக் குறைப்பதிலும், கல்வி முன்னேற்றத்திற்கான ஒரு நியாயமான வாய்ப்பாக பரீட்சை இருப்பதை உறுதி செய்வதிலும் இந்தக் குழு கவனம் செலுத்தும் என்றார்.
புலமைப்பரிசில் பரீட்சையுடன் தொடர்புடைய கடுமையான போட்டிக்கான மூல காரணத்தை இதன்போது எடுத்துரைத்த பிரதமர், பாடசாலை தரத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் மாணவர்களை புகழ்பெற்ற நிறுவனங்களில் சேரத் தூண்டுகின்றன என்பதையும் சுட்டிக்காட்டினார்.
இந்த இடைவெளிகளைக் குறைத்து, மிகவும் சமமான கல்வி முறையை உருவாக்குவதே அரசாங்கத்தின் நீண்டகால இலக்கு என்று அவர் வலியுறுத்தினார்.
அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் வரலாற்றில் கல்விக்காக அரசாங்கம் பாரிய தொகையை ஒதுக்கியுள்ளதாகவும், கல்வி அமைச்சினால் முன்மொழியப்பட்டுள்ள கல்வி சீர்திருத்தத்திற்காக ஐந்து அடிப்படைத் தூண்களைக் கொண்ட திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் இதன்போது மேலும் குறிப்பிட்டார்.