டென்வர் சர்வதேச விமான நிலையத்தில் டல்லாஸ் நோக்கிச் சென்ற அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று வியாழக்கிழமை (13) மாலை தீப்பிடித்தது.
இதன்போது, விமானத்தில் ஆறு பணியாளர்கள் உட்பட 178 பேர் இருந்தனர்.
அமெரிக்கன் ஏர்லைன்ஸின் போயிங் 737-800 விமானத்தின் இயந்திரத்திலேயே தீ விபத்து ஏற்பட்டதால் கரும் புகைகள் விமான நிலையத்தை சூழ்ந்தன.
இதையடுத்து அதிலிருந்து பயணிகளும், பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் வெளியேனா காட்சிகளில், போயிங் விமானத்தின் இறக்கையில் பயணிகள் குழுமி இருப்பதையும், சிலர் பைகளை வைத்திருந்ததையும், விமானத்தின் அடிப்பகுதியில் தீப்பிழம்புகள் எரிவதையும் காட்டியது.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், அமெரிக்க பெடரல் ஏவியேஷன் நிர்வாக (FAA) அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
வட அமெரிக்காவில் அண்மையில் நடந்த உயர்மட்ட விபத்துக்கள் விமானப் பாதுகாப்பு குறித்த கவலைகளை எழுப்பியதை அடுத்து இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கடந்த ஜனவரி மாத இறுதியில் வொஷிங்டன் டி.சி.யில் ஒரு பயங்கர விபத்தில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் பிராந்திய ஜெட் விமானம் அமெரிக்க இராணுவ பிளாக் ஹாக் ஹெலிகொப்டருடன் நடுவானில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் 67 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்க தலைநகரில் நடந்த விபத்து விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் பற்றாக்குறை மற்றும் அவர்களின் பணிச்சுமை குறித்த கேள்விகளை எழுப்பியது.