கடந்த இரண்டு வாரங்களில் கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் ஏற்றுக்கொள்ள வராத பொதிகளில் 1 கோடியே 78 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருள் கையிருப்பை இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
கண்டி, நீர்கொழும்பு, ஜா அல, வெள்ளவத்தை, நுகேகொட, தங்காலை, மஹியங்கனை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் உள்ள முகவரிகளுக்கு வழங்குவதற்காக கொழும்பு மத்திய தபால் பரிமாற்றத்தில் பிரான்ஸ், அமெரிக்கா, கனடா மற்றும் நெதர்லாந்தில் இருந்து இந்தப் பொதிகள் பெறப்பட்டன.
கடந்த 2 வாரங்களில் மத்திய தபால் பரிவர்த்தனைக்கு இதுபோன்ற 20 பொதிகள் வந்திருந்தும், அவற்றை யாரும் ஏற்க வராததால், பொதிகளை ஆய்வு செய்ய தபால் மா அதிபர் அனுமதி கடந்த 19 ஆம் திகதி கிடைத்தது.
அதன்படி, அவற்றை ஆய்வு செய்ததில், 14 பொதிகளில் , 272 கிராம் ‘குஷ்’ போதைப்பொருள், 2,049 ‘மெத்தம்படமைன்’ மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த போதைப்பொருள் கையிருப்பு சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்டு சான்றளிக்கப்பட்டதன் பின்னர், மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.