பங்களாதேஷில் இராணுவம், அரசியலில் தலையிடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவர்கள் தலைமையிலான புதிய அரசியல் கட்சி போராட்டத்தில் இறங்கியுள்ளது. இதனால் அங்கு மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
பங்களாதேஷில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் வெடித்ததால் அவர் இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். இதை தொடர்ந்து,முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.
ஹசீனாவுக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்த மாணவர்கள் ஒன்றிணைந்து, தேசிய குடிமக்கள் கட்சி என்ற புதிய அரசியல் கட்சியை கடந்த மாதம் ஆரம்பித்தனர். இந்நிலையில் பங்களாதேஷின் அரசியலில் அந்நாட்டு இராணுவம் குறுக்கிடுவதாக அக்கட்சியினர் குற்றஞ்சாட்டி வந்தனர்.
இந்நிலையில் இன்று டாக்கா பல்கலை வளாகத்திற்குள் தேசிய குடிமக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன்போது இராணுவத்தினர் தங்கள் பணியை மாத்திரம் மேற்கொள்ள வேண்டும் எனவும் , நாட்டுக்குள் நுழைந்து அரசியலில் தலையிடக் கூடாது எனவும் அதற்கு தாம் அனுமதிக்க மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளனர்.
மாணவர் போராட்டத்தால் டாக்காவில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவி வருகின்றது. இதன் காரணமாக இராணுவம், டாக்கா வீதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.