2025 இந்தியன் பிரீமியர் லீக்கில் நேற்றிரவு (26) நடைபெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு எதிரான தனது இரண்டாவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எட்டு விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது.
இந்தப் போட்டியில் தொடக்க ஆட்டக்காரர் குயின்டன் டிகொக் 61 பந்துகளில் 97 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்று கொல்கத்தாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.
ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஈடன் கார்டன்ஸ் போட்டியில் சிறப்பாக விளையாடத் தவறிய டி கொக், தனது உண்மையான திறமையை இந்த ஆட்டத்தில் வெளிப்படுத்தி 151 ஓட்ட சேஸிங்கை ஒரு சிக்ஸருடன் நிறைவுக்கு கொண்டு வந்தார்.
நடப்பு ஐ.பி.எல். சீசனில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி தொடர்ச்சியாக இரண்டாவது தோல்வியை சந்தித்த தருணம் இதுவாகும்.
குவஹாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் நேற்றிரவு 07.30 மணிக்கு ஆரம்பமான 2025 இந்தியன் பிரீமியர் லீக்கின் ஆறாவது போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அஜிங்க்யா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்துப் பரிமாற்றம் மேற்கொள்ளத் தீர்மானித்தது.
போட்டிக்கு முன்னதாக இரு அணிகளும் தலா ஒரு மாற்றத்தைச் செய்தன.
ராஜஸ்தான் அணியில் ஃபசல்ஹக் ஃபரூக்கிக்குப் பதிலாக சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்கா சேர்க்கப்பட்டார்.
காயமடைந்த சுனில் நரைருக்குப் பதிலாக கொல்கத்தா அணிக்காக மொயீன் அலி அறிமுக வீரராக நியமிக்கப்பட்டார்.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ரோயல்ஸ் 20 ஓவர்களில் 151/9 ஓட்டங்களை எடுத்தது.
சுழற்பந்து வீச்சாளர்கள் வருண் சக்கரவர்த்தி மற்றும் மொயீன் அலி ஆகியோர் மிடில் ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளைப் பகிர்ந்து கொண்டனர்.
வேகப்பந்து வீச்சாளர்கள் ஹர்ஷித் ராணா மற்றும் வைபவ் அரோராவும் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர், 152 ஓட்டம் இலக்கு என்று பதிலுக்கு துடுப்பெடுத்தாட ஆரம்பித்த கொல்கத்தா அணி ஆரம்பத்தில் மொயீன் அலி (5) மற்றும் தலைவர் அஜிங்க்யா ரஹானே (18) ஆகியோரை இழந்தது.
ஆனால் டி கொக் ஒரு முனையை உறுதியாகப் பிடித்து, இளம் வீரர் அங்கிரிஷ் ரகுவன்ஷியுடன் இணைந்து நல்லதொரு பலமான இணைப்பாட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதனால், கொல்கத்தா 17.3 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 153 ஓட்டங்களை குவித்து வெற்றி இலக்கினை கடந்தது.
போட்டியின் ஆட்டநாயகனாக குயின்டன் டிகொக் தெரிவானார்.
கொல்கத்தா அணியின் ஆட்ட போட்டியானது மார்ச் 31 அன்று மும்பை அணியுடன் வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.