மாவட்ட, பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்கள் எல்லாப் பிரச்சினைகளையும் தீர்க்கக்கூடியவை என்பதே ஒரு மாயை. அந்த மாயைக்குத் தூலமான ஓர் உதாரணம் தையிட்டி விகாரை. உலகம் முழுவதையும் பெருந் தொற்று நோய் கவ்விப் பிடித்த ஒரு காலகட்டத்தில் தையிட்டி விகாரைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அதாவது கொரோனா வைரஸ் மனிதர்களைத் தாக்கிய அந்தக் காலத்திலும் இலங்கைத் தீவின் இனவாத வைரஸ் உயிர்ப்புடன் பரவியது என்று பொருள்.அப்பொழுது நடந்த அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அப்பொழுது இருந்த பிரதேச சபையின் நிர்வாகம்-அதாவது கூட்டமைப்பின் அதிகாரத்துக்குள் இருந்த பிரதேச சபை நிர்வாகம்-சிங்கள பௌத்த மயமாக்கலுக்குத் துணை போனது.விளைவாக இப்பொழுது விகாரை கட்டப்பட்டு விட்டது.
கடந்த சில ஆண்டுகளாக நடந்துவரும் அபிவிருத்திக் குழுக் கூட்டங்களால் அந்த விகாரை கட்டி எழுப்பப்படுவதைத் தடுக்க முடியவில்லை. மட்டுமல்ல, கடந்த வாரம் அங்கே ஒரு புதிய கட்டிடம் திறக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அடுத்த பௌர்ணமிக்கு ஒரு போராட்டத்தைச் செய்வதற்கிடையில் மேலும் ஒரு கட்டடம் திறக்கப்படக்கூடும்.கடந்த வாரம் நடந்த அபிவிருத்திக் குழும் கூட்டத்தில் அது தொடர்பாக காணி உரிமையாளரான பாதிக்கப்பட்ட ஒரு பெண் எழுந்து நின்று கதைக்கிறார். அவருக்கு அங்கே தீர்வு வழங்கப்படவில்லை. அதுதான் மாவட்ட அபிவிருத்திகும் குழுக் கூட்டம்.
அப்படித்தான் கிளிநொச்சி மாவட்டத்திலும் கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலத்துக்கு மேலாக அங்கு நிகழும் சட்டவிரோத மண் அகழ்வு, சட்டவிரோத மது உற்பத்தி போன்றவைகள் தொடர்பாக தொடர்ச்சியாகக் கதைக்கப்பட்டு வருகிறது. ஆனால் மண் அகழ்வையும் கசிப்பு உற்பத்தியும் கசிப்பு வலைப் பின்னலையும் கட்டுப்படுத்த முடியவில்லை.போதைப்பொருள் வலைப் பின்னலையும் கட்டுப்படுத்த முடியவில்லை.கசிப்பு உற்பத்தியை அம்பலப்படுத்திய ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வனை அதில் சம்பந்தப்பட்டவர்கள் நடுவீதியில், கண்டி வீதியில் வைத்துத் தாக்கினார்கள். எந்த மக்களுடைய நன்மைக்காக அவர் அந்தச் செய்தியை வெளியே கொண்டு வந்தாரோ,அதே மக்கள் அவர் தாக்கப்படுவதைப் பார்த்துக்கொண்டு தம் வழியே போனார்கள்.யாரும் அதைத் தடுக்கவில்லை.குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டு பின் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.இதுதான் கிளிநொச்சி மாவட்டத்தின் நிலைமை. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அங்கே நடக்கும் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி முக்கியமான பிரச்சினைகளில் எத்தனைக்குத் தீர்வு காணப்பட்டிருக்கிறது ?
இப்படிப்பட்டதோர் பின்னணியில்,அண்மை நாட்களாக நடந்துவரும் வெவ்வேறு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் அர்ஜுனா மீண்டும் பேசுபொருளாக மாறியிருக்கிறார். அர்ஜுனாவை பேசுபொருள் ஆக்குவது குறிப்பிட்ட சில யுரியூப்களும் ஊடகங்களும்தான். இம்முறை ஆளும் தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அர்ஜுனாவை பேசுபொருள் ஆக்கியிருக்கிறார்கள்.நாடாளுமன்றத்தில் அர்ஜுனா பேசுவதற்கு விதிக்கப்பட்டிருக்கும் இடைக்காலத் தடையின் பின்னணியில்,அவர் தனக்கு கிடைக்கும் ஏனைய மேடைகளை நாடாளுமன்றம் போல பயன்படுத்தத் தொடங்கி விட்டார். தன்னைப் பேச விடாது தடுத்த அரசாங்கத்துக்கு எதிராக பேசுவதற்கு அவர் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களை பயன்படுத்துகின்றார். அக்கூட்டங்களில் பாவிக்க கூடாத வார்த்தைகளை அவர் பாவிக்கின்றார்.அவரால் சீண்டப்படும் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவ்வாறு பாவிக்கக்கூடாத வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றார்கள். இந்தக் கோமாளிக் கூத்துக்குள் சிக்கி அவமானப்பட விரும்பாத அதிகாரிகள் எல்லாவற்றையும் அமைதியாகப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். சிறீதரன் இடையில் எழும்பி வெளிநடப்புச் செய்கிறார்.
அர்ஜுனாவுக்கு பதில்வினை ஆற்றும் அரசியல் தோல்விகரமானது. அவர் தானும் சிரிக்கிறார்,மற்றவர்களுக்கும் சிரிப்புக் காட்டுகிறார்.எந்த அதிகாரிகளை நோக்கி அவர் குற்றம் சாட்டுகிறாரோ அவர்களும் சேர்ந்து சிரிக்கிறார்கள். அதாவது அவர் வைக்கும் குற்றச்சாட்டுக்களும் அங்கே சீரியஸ் இழந்து போகின்றன. அதிகாரிகளுக்கு எதிரான அவருடைய விமர்சனங்கள் மட்டுமல்ல தமிழ்த் தேசிய அரசியலும் அவ்வாறு சீரியஸ் தனத்தை இழப்பதை; ஒரு நகைச்சுவையாக மாற்றப்படுவதை அனுமதிக்க முடியாது.
பொது வெளியில் அர்ஜுனாவை எதிர்ப்பதற்கு யாரும் தயாராக இல்லை. ஏனென்றால் அவரில் வாய் வைத்தால் அவர் திருப்பி எப்படி வாய் வைப்பார் என்ற பயம். கம்பன் கழகத்துக்கு அதுதான் நடந்தது. அதே சமயம் யாரை எதிர்த்ததன்மூலம் அர்ஜுனா மிக விரைவாக வைரல் ஆனாரோ,அந்த அதிகாரிகள் இப்பொழுது கூலாக இருந்து சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் அர்ஜுனா தானே தன்னை தோற்கடிப்பார் என்று அவர்களுக்குத் தெரிகிறது.அவர் தன் வாயாலேயே கெட்டுவிடுவார் என்றும் எல்லாருக்கும் தெரிகிறது.
ஒருபுறம் அவர் புத்திசாலித்தனமாகக் கதைக்கிறார்.ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாய் வைக்கத் தயங்கும் இடங்களில் வாய் வைக்கிறார். ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவனிக்கத் தவறிய விடயங்களை அவர் சுட்டிக்காட்டுகிறார். அபிவிருத்தி சம்பந்தப்பட்ட,திட்டமிடல் சம்பந்தப்பட்ட எல்லா உரையாடல்களிலும் அவர் மைக்கைத் தன்னிடமே வைத்துக் கொள்கிறார். நாடாளுமன்றத்திலும் அப்படித்தான்.கிடைக்கின்ற எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அவர் கதைக்கிறார்.எல்லாவற்றையும் பற்றிக் கதைக்கிறார். அவருடைய வார்த்தைகள் எல்லைமீறிப் போனதன் விளைவாக நாடாளுமன்றத்தில் அவர் பேசுவதற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் தடைகளால் அவரைத் தடுக்க முடியாது. நாடாளுமன்றத்தில் தனக்குத் தடுக்கப்பட்ட வாய்ப்புகளை அவர் மாவட்ட,பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்களிலும் யூடியூப்பர்கள் மத்தியிலும் எடுத்துக் கொள்கிறார்.அவரை யாரும் கட்டுப்படுத்த முடியாது. அவர் தன் வாயாலேயே தன்னைக் கெடுத்துக் கொள்வார். தானே தன்னைத் தோற்கடித்துக் கொள்வார்.
ஆனால் அவருக்கு எதிர் வினையாற்றுகிறோம் என்று கூறிக்கொண்டு கடந்த கிழமை நடந்த யாழ்ப்பாண மாவட்டத்துக்கான அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அரசு தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரோடு வாக்குவாதப்பட்டு தங்களுடைய கொள்ளளவு இவ்வளவுதான் என்பதனை நிரூபித்திருக்கிறார்கள்.
அதையே தமிழ்த் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் செய்ய முடியாது. செய்யவும் கூடாது. அர்ஜுனா வெற்றிடத்தில் இருந்து தோன்றவில்லை. தமிழ்த் தேசிய அரசியலின் போதாமைகள், இயலாமைகள், தவறுகளில் இருந்துதான் அவர் தோன்றினார். தமிழ்த் தேசிய அரசியல் என்பதனை எதிரிக்கு எதிரான எதிர்ப்பு அரசியலாக மட்டும் குறுக்கியதன் விளைவுகளில் ஒன்றுதான் அர்ஜுனா. எதிரிக்கு எதிரான அரசியலை செயல்பூர்வமான அரசியலாக முன்னெடுக்காமல் வெறும் கோஷ அரசியலாக முன்னெடுத்ததன் விளைவுகளில் ஒன்றுதான் அர்ஜுனா. தமிழ்த் தேசியம் என்பது திருடர்களும் கபடர்களும் பொய்யர்களும் நபுஞ்சகர்களும் எடுத்தணியும் முகமூடியாக மாறியதன் விளைவாகத்தான் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் கட்சிகள் பின்னடைவைக் கண்டன.
எனவே அர்ஜுனாக்கள் எங்கிருந்து உற்பத்தியாகிறார்கள் என்பதனை தமிழ்த் தேசியக் கட்சிகள் கற்றுக்கொள்ள வேண்டும். தொழில்நுட்பத்தின் கைதியாக உள்ள ஒரு தலைமுறையை எப்படி நெருங்கி செல்வது? அவர்கள் மத்தியில் எப்படி வேலை செய்வது? அதற்குத் தொழில்நுட்பத்தையே எப்படி ஒரு கருவியாகப் பயன்படுத்துவது? என்பதனை தமிழ்த் தேசியக் கட்சிகள் கற்றுக் கொள்ள வேண்டும். கோஷ அரசியல் மற்றும் வேஷ அரசியல் என்பவற்றின் சிவப்பு மஞ்சள் நிறங்கள் வெளுரத் தொடங்கிவிட்டன.
தேசியவாத அரசியல் என்பது அது தமிழ்த் தேசமாக இருந்தாலும் சரி, சிங்கள தேசமாக இருந்தாலும் சரி, எந்தத் தேசமாக இருந்தாலும் சரி, ஒரு மக்கள் கூட்டத்தை ஆகக்கூடிய பட்சம் பெரிய திரளாகக் கூட்டிக் கட்டுவதுதான். அந்தப் பெரிய திரட்சியின் நன்மை- தீமை; பெரியது- சிறியது; நல்லவை- கெட்டவை; பிரம்மாண்டமானது- அற்பமானது… என்ற எல்லாவற்றையும் கவனத்திலெடுத்து அரசியல் செய்வதற்குரிய கட்டமைப்புகளை உருவாக்கியிருந்திருந்தால் அர்ச்சுனாக்கள் மேலெழுவதற்கான வெற்றிடம் தோன்றியிருக்காது. நிதிப்பலமும் அரச அனுசரணையும் உடைய படித்த நடுத்தர வர்க்கம் அரசு அலுவலகங்களில் எப்படியோ சமாளித்துக் கொள்ளும். ஆனால் சாதாரண ஜனங்களின் நிலை அப்படியல்ல.அவர்களுக்குச் சின்னச்சின்னப் பிரச்சனைகள், சின்னச் சின்னக் குறைகள் உண்டு. இனப்பிரச்சினையைத் தீர்க்கும் வரையிலும் அந்தப் பிரச்சினைகளை ஒத்திவைக்க முடியாது. ஏனென்றால் அவை நாளாந்தப் பிரச்சினைகள்; உடன் பிரச்சினைகள். இந்தப் பிரச்சினைப் பரப்பின் மீது தமிழ்த் தேசியக் கட்சிகள் கவனத்தைக் குவிக்கவில்லை. அவ்வாறு கவனத்தைக் குவிப்பதற்கு என்ன வேண்டும்?
திட்டமிடல் துறையில் அடுக்கடுக்காகப் பட்டங்கள் வேண்டுமா? அல்லது நிர்வாகத் துறையில் பட்டங்கள் வேண்டுமா? அல்லது மக்கள் ஆணை வேண்டுமா? இல்லை. இவை எவற்றையும்விட அதிகமாகத் தேவைப்படுவது, பேரன்பு. தனது மக்களை நேசிக்கத் தெரிய வேண்டும். தன்னைப்போல் தன் மக்களையும் நேசிக்கத் தெரிய வேண்டும். மக்களில் அன்பு வைத்தால், அவர்களுடைய நன்மை தீமைகளில் பங்கெடுத்தால் மக்கள் வெற்றியைப் பெற்றுத் தருவார்கள். எனவே அர்ஜுனாவுக்கு பதில் வினையாற்றுவதை விடவும் அர்ஜுனாக்கள் தோன்றக் காரணமாக இருந்த தமது பலவீனங்களையும் போதாமைகளையும் எப்படி அகற்றலாம் என்றுதான் தமிழ்த் தேசியக் கட்சிகள் சிந்திக்க வேண்டும்.