April Fools Day: ஏப்ரல் 1 அன்று, முட்டாள்கள் தினம், அதாவது ‘April Fools Day’ உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளை மக்கள் தங்கள் நண்பர்கள், நெருங்கியவர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களை ஏமாற்றி கொண்டாடுகிறார்கள். நாமெல்லாம் பாடசாலை பருவத்தில், அன்று யாரிடமும் ஏமாறாமல் இருக்க வேண்டுமே என்று நினைத்துக் கொண்ட நாட்களை மறக்க முடியாது. அதேபோல யாராவது ஒருவரையாவது ஏமாற்றி விட வேண்டும் என்ற விளையாட்டுத்தனமும் கலந்த ஆர்வமும் எல்லோருக்கும் இருக்கும். உன் சட்டை என்ன கிழிஞ்சிருக்கு ?… ஐயையையோ காலுக்கு அடியில பாம்பு என நண்பர்களிடம் சொல்லி… ஏமாற்றி விளையாடும் நாள் இந்த ஏப்ரல் முதல் திகதியாகும். ஏமாற்றுவதையும் ஏமாறுவதையும் சிரித்துக்கொண்டே ஏற்றுக்கொள்ளும் ஒரு தினம் எனலாம்.
April Fools Day முன்னதாக இந்த நாள் பிரான்ஸ் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் மட்டுமே கொண்டாடப்பட்டது, ஆனால் படிப்படியாக ஏப்ரல் முட்டாள் தினம் உலகம் முழுவதும் கொண்டாடத் தொடங்கியது. ஏப்ரல் ஒன்று அன்று முட்டாள்கள் தினம் (April 1) கொண்டாடப்படுவதற்குப் பின்னால் பல கதைகள் பரவலாக உள்ளன.
இந்த நாளின் வரலாற்றை தெரிந்து கொள்வோம்…
ஏப்ரல் முட்டாள்கள் தினம் தொடங்கிய கதை
ஏப்ரல் முட்டாள் தினம் ஏன் ஏப்ரல் 1 அன்று கொண்டாடப்படுகிறது என்பதற்கு உறுதியான சான்றுகள் இல்லை என்றாலும், அது பற்றி பல கதைகள் பரவலாக உள்ளன. அதில் ஒன்றின் படி, ஏப்ரல் முட்டாள் தினம் 1381 இல் தொடங்கியது. அந்த நேரத்தில் கிங் ரிச்சர்ட் வெற்றி பெற்ற நிலையில், போஹேமியா ராணி அன்னே அவர்கள் மார்ச் 32, 1381இல் நிச்சயதார்த்தம் செய்யப் போவதாக அறிவித்தார். நிச்சயதார்த்தம் பற்றிய செய்தியைக் கேட்டு, பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர், ஆனால் மார்ச் 31, 1381 அன்று, மார்ச் 32 வருவதில்லை என்பதை மக்கள் புரிந்துகொண்டனர். இதன் பின்னரே தாங்கள் ஏமாந்து விட்டதாக மக்கள் புரிந்து கொண்டனர். அன்று முதல் மார்ச் 32ஆம் திகதி அதாவது ஏப்ரல் 1ஆம் திகதி முட்டாள்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
‘ஏப்ரல் முட்டாள்கள் தினம்’ கொண்டாடப்படுவதன் காரணம்
முன்னதாக, ஐரோப்பிய நாடுகளில் புத்தாண்டு ஏப்ரல் 1 ஆம் திகதி கொண்டாடப்பட்டது. ஆனால், போப் கிரிகோரி புதிய நாட்காட்டியை ஏற்க உத்தரவிட்டதும், ஜனவரி 1 முதல் புத்தாண்டு கொண்டாடப்படத் தொடங்கியது. எனினும் சிலர் தொடர்ந்து ஏப்ரல் 1 ஆம் திகதியே புத்தாண்டைக் கொண்டாடிக் கொண்டிருந்தனர். அப்படிப்பட்டவர்களை முட்டாள்களாகக் கருதி கேலி செய்தனர். ஏப்ரல் முட்டாள்கள் தினம் இப்படித்தான் தொடங்கியது. இருப்பினும், 19 ஆம் நூற்றாண்டில், ஏப்ரல் முட்டாள் தினம் மிகவும் பிரபலமாகிவிட்டது. இப்படி கொண்டாடப்பட்டு இன்று வரை ஏப்ரல் முதலாம் திகதி என்றாலே முட்டாள்கள் தினம் என்று இன்று வரை பலரால் இன்றைய கடைபிடிக்கபடுவது குறிப்பிடதக்கது.