கல்முனை மத்திய பேருந்து நிலையமானது பராமரிப்பில்லாமல், காணப்படுகின்றமையால் பயணிகளும் பொது மக்களும் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
அம்பாறை மாவட்டத்தில் முக்கிய வர்த்தக கேந்திர நிலையமாகக் காணப்படும் கல்முனை மாநகரத்தில் அமைந்துள்ள குறித்த பேருந்து தரிப்பு நிலையம் மிக நீண்ட காலமாக புனரமைப்புச் செய்யப்படாமல் கவனிப்பார் அற்ற நிலையில் காணப்படுகிறது.
இதனால், பயணிகளும் வாகன சாரதிகளும் பல்வேறு அசௌகரீகங்களை எதிர்நோக்கி வருவதோடு, இந்தக் தரிப்பிடத்தின் மேல் மாடியில் பல்வேறு சட்டவிரோத மற்றும் சமூக சீர்கேடான விடயங்களும் அறங்கேறுவதாக அப்பகுதி மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
இப் பேருந்து தரிப்பு நிலையம், கவனிப்பாற்று காணப்படுகின்றமையால், குறித்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும், பயணிகள் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு, யாழ்ப்பாணம், புத்தளம், மன்னார், குருநாகல், கட்டுநாயக்க விமான நிலையம் ஆகிய இடங்களுக்கு நாளாந்தம் இங்கிருந்து பேருந்து சேவைகள் இடம்பெறுகின்றன.
அத்தோடு, கல்முனை பிராந்திய சுகாதார பணிமனை, கல்முனை தலைமையக பொலிஸ் நிலையம், கல்முனை மாநகர சபை ஆகியவற்க்கு அருகிலேயே இந்த பேருந்து நிலையமும் காணப்படுகிறது. இப்படி இருந்தும், இந்தப் பேருந்து நிலையத்தின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பது துரதிஸ்ட வசமாகும்.
முக்கியமாக, குறித்த கட்டடத்தின் கூரைகள் இடிந்து விழும் நிலையில் காணப்படுகின்றமையால், பயணிகள் அச்சத்துடனேயே இங்கு வந்து செல்ல வேண்டிய நிலைமையில் காணப்படுகின்றனர்.
எனவே, இந்த பிரதான பேருந்து தரிப்பு நிலையத்தை சகல வசதிகளுடன் கூடிய பேருந்து தரிப்பு நிலையமாக புனரமைத்துத் தருமாறும் பயணிகளும் பொது மக்களும் உரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.