யாழ், சுழிபுரத்திற்கு கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ,வருகை தரவுள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்த நிலையில், அவரது வருகைக்காக வெகுநேரம் காத்திருந்த மீனவர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது, நேற்று முன் தினம் சுழிபுரம் காட்டுப்புலம் மீனவர்களை காலை 10 மணியளவில் கடற்தொழிலாளர் மண்டபத்தில் ஒன்று கூடுமாறும், கடற்றொழில் அமைச்சர் உட்பட்ட குழு மூன்று வாகனங்களில் வருகை தரவுள்ளனர் எனவும், அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்களுக்கு பிரதேச கடற்றொழில் பரிசோதகர் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமைச்சரின் வருகைக்காக காலை 10 மணியிலிருந்து பி.ப 2 மணி வரை மீனவர்கள் காத்திருந்துள்ள நிலையில் அவர்கள் வருகை தரப்போவதில்லை எனத் தகவல் கிடைத்துள்ளதாகவும், இதனையடுத்து மீனவர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவமானது அப்பகுதி மீனவர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.