2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 32 ஆவது போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியானது சூப்பர் ஓவரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை தோற்கடித்தது.
டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதற்கிணங்க முதலில் துடுப்பெடுத்தாடுவதற்காக டெல்லி கேபிட்டல்ஸ் அணி களமிறங்கியது.
டெல்லியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் பொரெல் மற்றும் பிரேசர் மெக்கர்க் ஆகியோர் ஆரம்ப வீரர்களாக களமிறங்கினர்.
மெக்கர்க் 9 ஓட்டங்களிலும், அடுத்து வந்த கருண் நாயர் ஓட்டம் எதுவும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
தொடர்ந்து பொரெல் மற்றும் கே.எல்.ராகுல் ஜோடி சேர்ந்தனர்.
இருவரும் நிதானமாக ஆடி ஓட்டங்களை சேர்த்தனர்.
இதில் ராகுல் 38 ஓட்டங்களுடனும், பொரெல் 49 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து அக்சர் படேல் மற்றும் டிர்ஸ்டன் ஸ்டப்ஸ் ஜோடி சேர்ந்தனர்.
அக்சர் படேல் 14 பந்தில் 34 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில் டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 188 ஓட்டங்களை எடுத்தது.
டெல்லி தரப்பில் அதிகபட்சமாக அபிஷேக் பொரெல் 49 ஓட்டங்களை எடுத்தார்.
ராஜஸ்தான் தரப்பில் ஆர்ச்சர் 2 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து 189 ஓட்டம் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது.
அந்த அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஜெய்ஸ்வால்-சஞ்சு சாம்சன் ஜோடி அதிரடியாக விளையாடி நல்ல தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர்.
இந்த நிலையில், சஞ்சு சாம்சன் 31 ஓட்டங்களில் காயம் காரணமாக வெளியேறினார்.
அடுத்து வந்த ரியான் பராக் 8 ஓட்டங்களில் ஆட்டம் இழந்த நிலையில் நிதிஷ் ராணாவுடன் ஜெய்ஸ்வால் ஜோடி சேர்ந்தார்.
அரைசதம் கடந்த ஜெய்ஸ்வால் 37 பந்துகளில் 51 ஓட்டம் எடுத்த நிலையில், ஆட்டமிழந்தார். மறுமுனையில் நிதிஷ் ராணா அதிரடியாக விளையாடி 28 பந்துகளில் 51 ஓட்டங்களை குவித்தார்.
இறுதி ஓவரில் 6 பந்துகளில் 9 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில், துருவ் ஜுரேல்-ஹெட்மேயர் களத்தில் இருந்தனர்.
இதையடுத்து கடைசி பந்தில் வெற்றிக்கு 2 ஓட்டங்கள் தேவைப்பட்டபோது, மிட்செல் ஸ்டார்க் வீசிய பந்தை எதிர்கொண்ட துருவ் ஜுரேல், 2 ஓட்டங்களுக்காக ஓடியபோது ரன் அவுட் ஆனார்.
இதன்படி 20 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 188 ஓட்டங்களை எடுத்தது.
இதனால் வெற்றியை தீர்மானிக்க சூப்பர் ஓவர் போடப்பட்டது.
இதில் முதலில் துடுப்பாட்டம் செய்த ராஜஸ்தான் அணியில் ஹெட்மேயர்-ரியான் பராக் களமிறங்கினர்.
அபாரமாக பந்துவீசிய மிட்செல் ஸ்டார்க், 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ராஜஸ்தான் அணி 11 ஓட்டங்கள் எடுத்த நிலையில், 12 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது.
டெல்லி அணி சார்பில் சூப்பர் ஓவரில் ஸ்டப்ஸ்-கே.எல்.ராகுல் களமிறங்கினர்.
இந்த ஜோடி 4 பந்துகளில் 12 ஓட்டங்களை எடுத்தது.
இதையடுத்து சூப்பர் ஓவரில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி டெல்லி அணி திரில் வெற்றி பெற்றது.



















