அமெரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த காங்கிரஸ் எம்.பியும் மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி, காஷ்மீரின் பஹல்காமில் நேற்று முன்தினம் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, தனது பயணத்தை பாதியில் இரத்து செய்துவிட்டு மீண்டும் நாடு திரும்பியுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் பஹல்காமில் உள்ள சுற்றுலா தலத்தில் தீவிரவாதிகள் நேற்று மாலை நடத்திய துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் 2 வெளிநாட்டினர் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயம் அடைந்தனர்.
குறித்த சம்பவம் நாடளாவிய ரீதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் இது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டமொன்று நேற்று நடைபெற்றது.
இதில் அட்டாரி – வாகா எல்லையை மூடுவது என பல முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், இன்று அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
இந்தக் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு எவ்வாறு பதிலடி கொடுப்பது என்பது உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படலாம் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அமெரிக்காவுக்கு ச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்த ராகுல் காந்தி தனது பயணத்தை பாதியில் இரத்து செய்துவிட்டு நாடு திரும்பியுள்ளார். இன்று நடைபெற உள்ள முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க ஏதுவாக அவர் நாடு திரும்பியுள்ளார் எனக் கூறப்படுகின்றது.


















