கல்கிஸ்ஸையில் காலி வீதிக்கு அருகில் கடந்த 5ஆம் திகதி இளைஞன் ஒருவரை துரத்திச் சென்று சுட்டுக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் துப்பாக்கிதாரியும், அவருடன் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற நபர் மற்றும் அவருக்கு உதவியதாக தெரிவிக்கப்படும் மேலும் இருவரை கல்கிஸ்ஸ வலய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில், அவரிடமிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்றும் , 9mm ரக தோட்டாக்கள் 15 மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள் இலக்கத் தகடுகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.
குறித்த துப்பாக்கிதாரி கொட்டாவ விகாரை மாவத்தையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன்
அவர் விமானப்படையில் ஒன்றரை வருடம் கடமையாற்றிய விமானப்படை சிப்பாய் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கொலைக்காக துப்பாக்கிதாரி வருகைதந்த மோட்டார் சைக்கிள், கொட்டாவ மாபுல்கொட பகுதியில் உள்ள அவரது வீட்டின் பின்னால் பாகங்களாக பிரிக்கப்பட்டு புதைக்கப்பட்ட நிலையில், இரண்டு போலி இலக்க தகடுகளுடன் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிர்த்துள்ளனர்.
இந்தக் கொலைக்கு உடந்தையாக செயற்பட்ட இரண்டு நபர்கள் கடந்த 10 ஆம் திகதி கைது செய்யப்பட்டதாகவும் கல்கிஸ்ஸ வலய குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.