இந்தியாவின் தெற்கு கேரள மாநிலத்தில், எண்ணெய் மற்றும் அபாயகரமான பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்று அரபிக் கடலில் கசிந்து மூழ்கியதை அடுத்து, அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை (25) கொச்சி நகருக்கு அருகே கவிழ்ந்த லைபீரியக் கொடியுடன் கூடிய கப்பலில் கசிவு ஏற்பட்டது.
கடலோரப் பகுதி பல்லுயிர் பெருக்கத்தால் நிறைந்ததாகவும், ஒரு முக்கியமான சுற்றுலா தலமாகவும் உள்ளது.
கப்பலில் இருந்த 24 பணியாளர்களும் மீட்கப்பட்டுள்ளனர்.
ஆனால் கப்பலின் 640 கொள்கலன்களில் சில கரையை நோக்கி நகர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.
இதனால் அப்பகுதியில் மக்கள் வெளியேற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கப்பலில் இருந்தும் அதன் பொருட்களில் இருந்தும் கசிந்த எண்ணெய், எரிபொருள் மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் பொருட்கள் குடியிருப்பாளர்களின் ஆரோக்கியத்திற்கும் கடல்வாழ் உயிரினங்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும் என்று அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.
கடலுக்கு அருகில் வசிக்கும் மக்கள் கரையில் அடித்துச் செல்லக்கூடிய எந்த கொள்கலன்களையோ அல்லது எண்ணெயையோ தொட வேண்டாம் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
அதே நேரத்தில் மீனவர்கள் மூழ்கிய கப்பலுக்கு மிக அருகில் செல்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்திய கடலோர காவல்படை மாசு கட்டுப்பாட்டு உபகரணங்களை ஏற்றிச் செல்லும் ஒரு கப்பலை அந்த இடத்திற்கு அனுப்பியுள்ளது.
எண்ணெய் கசிவு கண்டறிதல் அமைப்பைக் கொண்ட அதன் விமானங்களில் ஒன்றையும் அந்தப் பகுதியை ஆய்வு செய்ய அனுப்பியுள்ளது.
விழிஞ்சம் துறைமுகத்திலிருந்து கொச்சிக்கு பயணித்த MSC ELSA 3 என்ற கப்பல், கொச்சி கடற்கரையிலிருந்து சுமார் 38 கடல் மைல் தொலைவில் இருந்தபோது ஆபத்தான முறையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் அதன் ஒரு பெட்டியில் ஏற்பட்ட கசிவு காரணமாக அது அரபிக் கடலில் கவிழ்ந்தது.














